நடவடிக்கை!= பி.எப்., தொகை செலுத்தாவிட்டால்... = கோவை மண்டல கமிஷனர் எச்சரிக்கை

தினமலர்  தினமலர்

திருப்பூர்:பி.எப்., தொகையை முறையாக செலுத்தாத தொழில் முனைவோர், நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி வரும், தொழிலாளர்கள் தங்கள் கணக்குடன் ஆதார் இணைக்கவேண்டும் என, பி.எப்., கமிஷனர் பேசினார்.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குடன் (பி.எப்.,), ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தொழிலாளர் மத்தியில், உங்களைத்தேடி பி.எப்., என்கிற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. புதிய திருப்பூர் நேதாஜி அப்பேரல் பார்க்கில், பி.எப்., விழிப்புணர்வு மற்றும் குறைகேட்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், கோவை மண்டல பி.எப்., கமிஷனர் ஜெய்வதன் இன்கிளே பேசியதாவது:தொழிலாளர் அனைவரும், தங்கள் பி.எப்., கணக்குடன், ஆதார் எண் இணைக்கவேண்டும். பி.எப்., துறையில், காகித பயன்பாடு, குறைக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில், தொழிலாளர்கள், தங்கள் கணக்குகளை 'ஆன்லைனில்' நிர்வாகிக்க, ஆதார் இணைப்பு கைகொடுக்கும். தங்கள் கணக்கில் உள்ள தொகையை, முழுமையாக பெறுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு பெறு வதால், ஓய்வு காலத்தில், பென்ஷன் பெறமுடியாத நிலை ஏற்படும். முதுமை காலத்தில், கஷ்டப்பட நேரிடும். கணக்கை முடிப்பதை தவிர்த்து, வீடு வாங்குவது, மருத்துவம், கல்வி என பல்வேறு தேவைகளுக்கு, அட்வான்ஸ் தொகை பெறலாம்.தொழில் முனைவோர், ஒவ்வொரு மாதமும், பி.எப்., தொகையை உரிய காலத்துக்குள் செலுத்திவிட வேண்டும். தொகை செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தொழிலாளர்கள், தாங்கள் சார்ந்துள்ள நிறுவனங்கள் வாயிலாகவோ, பி.எப்., அலுவலகங்களை தொடர்புகொண்டு, ஆதார் விவரங்களை இணைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.பி.எப்., சார்ந்த பல்வேறு குறைகள் குறித்து, தொழிலாளர் எட்டுபேர், மனு அளித்தனர். மனுக்களை பரிசீலித்து, தீர்வு ஏற்படுத்தி தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். திருப்பூர் மாவட்ட பி.எப்., உதவி கமிஷனர் விஜய் ஆனந்த் உள்பட அதிகாரிகள் மற்றும் பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள், தொழிலாளர்கள் திரளாக பங்கேற்றனர்.

மூலக்கதை