நேஷனல் ஹெரால்டு விவகாரம்: பிரதமரை வேகமாக கட்டிப் பிடிக்கிறார்: ஐடி அதிகாரியை கண்டால் ஓடுகிறார்: ராகுல் மீது ஸ்மிருதி இரானி கடும் தாக்கு

தினகரன்  தினகரன்
நேஷனல் ஹெரால்டு விவகாரம்: பிரதமரை வேகமாக கட்டிப் பிடிக்கிறார்: ஐடி அதிகாரியை கண்டால் ஓடுகிறார்: ராகுல் மீது ஸ்மிருதி இரானி கடும் தாக்கு

புதுடெல்லி; நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் ராகுல் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ‘‘பிரதமரை உடனே கட்டிப் பிடிக்கிறார். ஐடி அதிகாரியை கண்டால் ஓடுகிறார்’’ என்று குறிப்பிட்டார். நேஷனல் ஹெரால்டு பங்குகளை மாற்றியது தொடர்பாக  2011-12 நிதியாண்டில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் ஆஸ்கர் பெர்னான்டஸ் ஆகியோரின் வருமானம் தொடர்பான கணக்கு விபரங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்த வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு தடை விதிக்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் இவர்கள் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மூவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், ஏ.கே.சாவ்லா ஆகியோரை கொண்ட அமர்வு உத்தரவிட்டது. வருமான வரித்துறை (ஐடி) விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இந்த உத்தரவு அமைந்தது. இது குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது:ராகுல் காந்தி பல கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியுள்ளது. ஏனெனில், வருமானவரி துறை விசாரணைக்கு மறுத்து நீதிமன்றத்தில் அவர்கள் செய்த மேல்முறையீடு மூலம் காங்கிரஸ் கட்சியின் ஊழல் வெளிவந்துள்ளது. எந்த ஒரு இந்தியனும் வருமான வரித்துறை நோட்டீசை புறக்கணித்தது இல்லை. ஆனால், ராகுல் காந்தி வருமான வரித்துறை அதிகாரிகளை கண்டால் பல மைல் தூரம் ஓடுகிறார். ஏன் ராகுல் காந்தி?, நீங்கள் பிரதமரை கட்டிப்பிடிக்க மட்டும் வேகமாக செல்கிறீர்கள். ஆனால், ஐடி அதிகாரிகள் உங்களிடம் விசாரணை நடத்த வரும்போது மட்டும் பல மைல் தூரம் ஓடுவது ஏன்? காந்தி குடும்பம் தங்கள் குடும்ப அதிகாரத்திற்காக வேலை செய்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை