அடுத்த மாதம் முதல் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அதிகரிப்பு- பிரதமர் மோடி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
அடுத்த மாதம் முதல் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அதிகரிப்பு பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி: அடுத்த மாதம் முதல் ஆஷா, அங்கன்வாடி, பேறுகால உதவி செவிலியர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை அதிகரிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடெங்கிலும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள் (ஆஷா), அங்கன்வாடி பணியாளர் மற்றும் பேறுகால உதவி செவிலியர் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் நேற்று கலந்துரையாடினார்.  அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:சேர்ந்து உழைப்பது, புதுமையான வழிவகைகள், தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவது, மருத்துவ, ஊட்டச்சத்து சேவைகள் வழங்குதலை மேம்படுத்துவது, போஷான் அபியான் (ஊட்டச்சத்து இயக்கம்) இலக்குகளை அடைவது, ஊட்டச்சத்துக் குறைவை குறைப்பது ஆகியவற்றில் உங்கள் சேவை பாராட்டத்தக்கது.இந்த இயக்கத்தில் அதிக அளவிலான பெண்களையும், குழந்தைகளையும் ஈடுபடுத்துவது அவசியம். நாட்டின் குழந்தைகள் வலுவின்றி இருந்தால், அதன் வளர்ச்சி வேகம் குறைந்து விடும்.  பிறந்த குழந்தைக்கு முதல் ஆயிரம் நாட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்த ஆயிரம் நாட்களில் ஊட்டச்சத்து மிகுந்த உணவு, உணவு பழக்கங்கள் ஆகியவைதான் உடல் எவ்வாறு அமையும், அது எவ்வாறு எழுத்தறிவு பெறும், அதன் மன வலு எந்த அளவு இருக்கும் என்பதை எல்லாம் முடிவு செய்கிறது. ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மத்திய அரசு வழக்கமாக வழங்கும் ஊக்குவிப்பு தொகை உயர்த்தப்படுகிறது. ஆஷா பணியாளர்களின் ஊக்கத்தொகை 2 மடங்காக்கப்படும். இது அடுத்த மாதம் முதல் அமலாகும். மேலும், அனைத்து ஆஷா பணியாளர்கள், அவர்களது உதவியாளர்கள் பிரதமர் ஆயுள் காப்பீட்டுத் திட்டம், பிரதமர் விபத்து காப்பீட்டு திட்டம் ஆகியவற்றின் கீழ் இலவச காப்பீடுகளை பெறுவார்கள். இவ்வாறு பிரதமர் பேசினார்.அங்கன்வாடி பணியாளர்களுக்கான மதிப்பு ஊதியத்தில் குறிப்பிடத்தக்க உயர்வையும் பிரதமர் அறிவித்தார்.  இதுவரை 3000 பெற்றவர்கள் இனி 4500 பெறுவார்கள்.  அதேபோல், 2200 பெற்றவர்கள் இனி, 3,500 பெறுவார்கள்.  அங்கன்வாடி உதவியாளர்களின் மதிப்பூதியமும் ரூ.1500-லிருந்து, 2250 ஆக உயர்த்தப்படுகிறது.

மூலக்கதை