இலங்கையுடன் மகளிர் கிரிக்கெட் : மந்தனா அதிரடியில் இந்தியா அபார வெற்றி

தினகரன்  தினகரன்
இலங்கையுடன் மகளிர் கிரிக்கெட் : மந்தனா அதிரடியில் இந்தியா அபார வெற்றி

காலே: இலங்கை மகளிர் அணியுடனான ஒருநாள் போட்டியில், இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இலங்கையின் காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் டாசில் வென்று பேட் செய்த இலங்கை அணி, இந்திய வீராங்கனைகளின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 35.1 ஓவரிலேயே 98 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான ஜெயாங்கனி அதிகபட்சமாக 33 ரன் எடுத்தார். வீரக்கொடி 26, சுராங்கிகா 12 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றி இலக்க ரன்னில் வெளியேறினர். இந்திய பந்துவீச்சில் மான்சி ஜோஷி 3, ஜுலன் கோஸ்வாமி, பூனம் யாதவ் தலா 2, தீப்தி, ராஜேஸ்வரி, ஹேமலதா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 99 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீராங்கனைகள் பூனம் ராவுத் - ஸ்மிருதி மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 18.4 ஓவரில் 96 ரன் சேர்த்து அசத்தியது.பூனம் ராவுத் 24 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். இந்தியா 19.5 ஓவரிலேயே 1 விக்கெட் இழப்புக்கு 100 ரன் எடுத்து மிக எளிதாக வென்றது. மந்தனா 73 ரன் (76 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் மித்தாலி ராஜ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.மித்தாலி சாதனை:இலங்கைக்கு எதிராக இன்று களமிறங்கிய ஒருநாள் போட்டி, இந்திய அணி கேப்டன் மித்தாலி ராஜ் களமிறங்கிய 118வது போட்டியாகும். மகளிர் கிரிக்கெட்டில் அதிக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வீராங்கனை என்ற சாதனை மித்தாலி வசமாகி உள்ளது. இதற்கு முன்பாக இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸ் 117 போட்டிகளில் விளையாடியதே சாதனையாக இருந்தது.

மூலக்கதை