6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா ஏ : தொடரை சமன் செய்தது

தினகரன்  தினகரன்
6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா ஏ : தொடரை சமன் செய்தது

பெங்களூரு: ஆஸ்திரேலியா ஏ அணியுடனான 2வது டெஸ்டில் (4 நாள் போட்டி), இந்தியா ஏ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.ஆலூர், கர்நாடகா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா ஏ அணி முதல் இன்னிங்சில் 346 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் மிட்செல் மார்ஷ் 113* ரன் விளாசினார். இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 505 ரன் குவித்தது. இதைத் தொடர்ந்து, 159 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா ஏ அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 38 ரன் எடுத்திருந்தது. கடைசி நாளான நேற்று அந்த அணி 213 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டிராவிஸ் ஹெட் 47, ஹேண்ட்ஸ்கோம்ப் 56, கேப்டன் மிட்செல் மார்ச் 36, நெசர் 17 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர்.இந்தியா ஏ பந்துவீச்சில் குல்தீப் யாதவ், கவுதம் தலா 3, சாஹர், நதீம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, ஆட்டம் முடிவதற்கு மிகக் குறைவான அவகாசம் மட்டுமே இருந்த நிலையில், 55 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. பேட்ஸ்மேன்கள் அவசரமாக விளையாடியதால் 3.5 ஓவரில் 25 ரன்னுக்கு 4 விக்கெட் சரிந்தாலும், இந்தியா ஏ அணி 6.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 55 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. பாவ்னே 28, சமர்த் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இரண்டு போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் டிரா ஆனது.

மூலக்கதை