ஓவலில் ராகுல் - பன்ட் சதம் வீண் : 118 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி

தினகரன்  தினகரன்
ஓவலில் ராகுல்  பன்ட் சதம் வீண் : 118 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி

லண்டன்: இங்கிலாந்து அணியுடனான 5வது மற்றும் கடைசி டெஸ்டில், லோகேஷ் ராகுல் - ரிஷப் பன்ட் ஜோடியின் அபார சதம் வீணானது. 118 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்து ஏமாற்றமளித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்று கோப்பையை கைப்பற்றியது.இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, முதலில் விளையாடிய டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் வென்றது. அடுத்து நடந்த ஒருநாள் போட்டித் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதின. நான்கு போட்டிகளின் முடிவில் 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.இந்த நிலையில், 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. டாசில் வென்று பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 332 ரன் குவித்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி, 292 ரன் குவித்து ஆல் அவுட்டானது. இதைத் தொடர்ந்து, 40 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 423 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இந்த டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறும் குக் முதல் இன்னிங்சில் 71 ரன்னும், 2வது இன்னிங்சில் 147 ரன்னும் விளாசி சாதனை படைத்தார். கேப்டன் ஜோ ரூட் 2வது இன்னிங்சில் 125 ரன் விளாசினார். இதையடுத்து 464 ரன் எடுத்தால் வெற்றி என்ற மிகக் கடினமான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஷிகர் தவான் 1 ரன், புஜாரா மற்றும் கேப்டன் கோஹ்லி டக் அவுட்டாகி ஏமாற்றமளிக்க, இந்தியா 2 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது.எனினும், லோகேஷ் ராகுல் - அஜிங்க்யா ரகானே ஜோடி உறுதியுடன் போராடி அணியை சரிவில் இருந்து மீட்டது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 58 ரன் எடுத்திருந்தது. ராகுல் 46, ரகானே 10 ரன்னுடன் நேற்று பரபரப்பான கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 118 ரன் சேர்த்தனர். ரகானே 37 ரன் எடுத்து மொயீன் அலி சுழலில் ஜென்னிங்ஸ் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த விஹாரி ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, இந்தியா 121 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது.இந்திய அணியை விரைவாக சுருட்டி வெற்றியை வசப்படுத்தும் முனைப்புடன் இங்கிலாந்து தாக்குதலை தீவிரப்படுத்திய நிலையில், ராகுல் - ரிஷப் பன்ட் ஜோடி கடுமையாகப் போராடி பதிலடி கொடுத்தது. இவர்களைப் பிரிக்க முடியாமல் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் திணறினர். ராகுல் தனது 5வது சதத்தை பூர்த்தி செய்ய, மறு முனையில் பன்ட் அமர்க்களமான சிக்சருடன் தனது முதலாவது சதத்தை பதிவு செய்து அசத்தினார். இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 204 ரன் சேர்த்தபோது இந்திய அணி வெற்றி பெறவும் வாய்ப்பு இருப்பதாகத் தோன்றியது. ஆனால், இங்கிலாந்து அணி புதிய பந்தை எடுத்ததும் ஆட்டத்தின் போக்கு திசை மாறியது. ராகுல் 149 ரன் (224 பந்து, 20 பவுண்டரி, 1 சிக்சர்), பன்ட் 114 ரன் (146 பந்து, 15 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி, எதிர்பாராத வகையில் ஸ்பின்னர் அடில் ரஷித்திடம் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். ரவீந்திர ஜடேஜா (13), இஷாந்த் ஷர்மா (5) கரன் வேகத்தில் வெளியேறினர். ஆட்ட நேரம் முடிய 14 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில் முகமது ஷமி, ஆண்டர்சன் வேகத்தில் டக் அவுட்டாக இந்திய அணியின் ஆறுதல் டிரா கனவு தகர்ந்தது. இந்திய அணி 94.3 ஓவரில் 345 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி 118 ரன் வித்தியாசத்தில் தோற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து 4-1 என்ற கணக்கில் தொடரை வென்று கோப்பையை கைப்பற்றியது.

மூலக்கதை