ஆப்கனில் தற்கொலைப்படை தாக்குதல் 25 பேர் பலி

தினகரன்  தினகரன்
ஆப்கனில் தற்கொலைப்படை தாக்குதல் 25 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நேற்று நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர்.ஆப்கானிஸ்தானில் தலிபான் மற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆப்கனின் நங்கர்ஹார் மாகாணத்தில் போலீஸ் கமாண்டர் ஒருவருக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மொமண்டா மாவட்டத்தில் நெடுஞ்சாலையை  மறித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன், தன்னிடம் இருந்த குண்டுகளை வெடிக்க  செய்தான். இதில் சம்பவ இடத்திலேயே 25 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆர்ப்பாட்டத்தை குலைப்பதற்காக இந்த தாக்குதலில் அவன் ஈடுபட்டானா என்பது குறித்து தெரியவில்லை.மேலும், நங்கர்ஹர் மாகாணத்தின் நான்கு பகுதிகளில் நேற்று அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஜலாலாபாத் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு அருகில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஒரு மாணவன் உயிரிழந்தான். மேலும் 4 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதல்களுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

மூலக்கதை