படகு கவிழ்ந்து 100 அகதிகள் பலி தொடர்கிறது சோகம்

தினமலர்  தினமலர்

திரிபோலி: லிபியாவில் இருந்து இத்தாலிக்கு அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.ஆப்ரிக்காவின் சோமாலியா, சூடான், எகிப்து, நைஜீரியா, மாலி, ஐவரி கோஸ்ட், செனகல், கினியா போன்ற நாடுகளில் இருந்து பலர், லிபியாவுக்கு அகதிகளாக இடம் பெயர்கின்றனர். பின், அங்கிருந்து சட்டவிரோதமாக மத்திய தரைக்கடலில் படகு பயணம் மேற்கொண்டு இத்தாலி, கிரீஸ், துருக்கி போன்ற நாடுகளில் தஞ்சம் அடைகின்றனர். படகில் அதிக எண்ணிக்கையில் அகதிகள் பயணிக்கும் போது விபத்துக்கள் நடக்கின்றன.செப்., 1ல் லிபியாவில் இருந்து இத்தாலிக்கு இரண்டு ரப்பர் படகுகளில் அகதிகள் சென்ற போது, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. லிபிய கடற்படை வீரர்கள், 270 பேரை மீட்டு, துறைமுக நகரான கோம் பகுதிக்கு கொண்டு வந்தனர். இதில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள் அடங்குவர். ஆனால் 100க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி பலியாகினர் என லிபிய கடற்படை தெரிவித்துள்ளது.2014 வரை லிபியாவில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக துருக்கி, கிரீஸ் போன்ற நாடுகளுக்கு அகதிகள் சென்றனர். இது குறுகிய துாரமாகவும் இருந்தது. 2014க்குப்பின், நீண்ட துாரமும், ஆபத்தான வழியாகவும் உள்ள இத்தாலிக்கு அகதிகள் செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் உயிரிழப்பும் அதிகரிக்கிறது.
இதுவரை பலி 1500 : மத்திய தரைக்கடலில் இந்தாண்டில் இதுவரை 1,500 அகதிகள் பலியாகியுள்ளனர். இதற்கு முன் அகதிகள் 2014ல் 3,500 பேர், 2015ல் 3,750 பேர், 2016ல் 5,000 பேர், 2017ல் 3,100 பேர் பலியாகினர்.


மூலக்கதை