பத்திரிகையாளர்கள் சிறை தண்டனை: அமைதி காக்கும் சூச்சி

தினமலர்  தினமலர்

யாங்கூன்: மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீதான அந்நாட்டு ராணுவத்தினரின் வன்முறைத் தாக்குதல்களை வெளி உலகுக்குக் கொண்டு வந்த இரண்டு பத்திரிகையாளர்களுக்கு சிறை தண்டனை விதித்த விவகாரத்தில் அந்நாட்டுத் தலைவர் ஆங் சான் சூச்சி தொடர்ந்து மவுனம் காத்து வருவது சர்வதேச அளவில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். நீண்டகாலமாக வசித்து வரும் இவர்களுக்கு குடியுரிமை வழங்க அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. அங்கு முஸ்லிம்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.இந்த மோதல் கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சகட்டத்தை எட்டியது. முஸ்லிம்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அவர்களது வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களும் நடந்தன. இதில் அந்நாட்டு ராணுவமும் முஸ்லிம்களுக்கு எதிராகத் தாக்குதலில் ஈடுபட்டது.இதனால், அங்கிருந்து தப்பிய ரோஹிங்கியா முஸ்லிம்கள் பக்கத்து நாடான வங்கதேசத்தில் அகதிகளாகக் குடியேறினர். இந்த நிலையில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக மியான்மரில் நடந்த தாக்குதலையும், அதில் அந்நாட்டு ராணுவத்தின் பங்கு இருந்ததையும் வெளிக்கொண்டு வந்த ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் இரு பத்திரிகையாளர்களான வோ லோன் (32) மற்றும் யாவ் சோ ஓ (28) ஆகிய இருவருக்கும் மியான்மர் நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டணை விதித்ததுள்ளது.இந்த விவகாரத்தில் மியான்மர் தலைவர் சூச்சி தொடர்ந்து எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது உலக நாடுகளிடையேயும், பத்திரிகையாளர்கள் தரப்பிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.மேலும், பத்திரிகையாளர்களைக் கைது செய்யும்போது முறையான ஆவணங்களைக் காட்டி கைது செய்யப்படவில்லை.பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த சிறை தண்டணையை ரத்து செய்யக் கோரி அவர்களின் குடும்பத்தினர் ஆங் சான் சூச்சிக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதற்கும் அவர் பதிலளிக்காமல் உள்ளார். மாணவர்கள் எதிர்ப்பையும் கண்டு கொள்ளவில்லை. மியான்மரில் ராணுவ ஆட்சி முறைக்கு எதிராக ஆங் சான் சூச்சியின் அகிம்சை வழிப் போராட்டத்திற்கு உலக அங்கீகாரம் கிடைத்தது. இதன் காரணமாகவே 1991-ல் அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு அவரது தலைமயிலான அரசு ஆட்சிக்கு வந்தது. சூச்சி ராணுவத்தின் அடக்கு முறை நடவடிக்கைகளுக்கு இசைவு அளிக்கிறார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக இவ்விவகாரத்தில் அமைதி காத்து வருகிறார்.

மூலக்கதை