பிச்சை புகினும் கற்கை நன்றே!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
பிச்சை புகினும் கற்கை நன்றே!

கற்கை நன்றே; கற்கை நன்றே; 
பிச்சை புகினும் கற்கை நன்றே

என்கிறது வெற்றி வேற்கை. பிச்சை எடுத்தாவது கல்வி கற்கலாம் என்பதே இதன் பொருள். பிச்சை எடுத்தே கல்வி கற்கும் ஒரு சிறுவன் இதற்கு உதாரணமாகத் திகழ்ந்து வருகின்றான். மற்றவர்களுக்குப் பாடமாகவும் விளங்கி வருகின்றான்.  

மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் கஸ்ராலி பகுதியில் வசித்து வரும் தம்பதிக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.  இவர்களின் ஒரு மகனான பவன் கிஷாங்கிர் தேவடே (வயது 15) பிலோலி பகுதியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி பள்ளிக்கூடத்தில் 9ம் வகுப்பு படித்து வருகிறான்.

பவனின் பெற்றோர் பிச்சை எடுப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள். அவர்கள் வருமானம் குடும்பம் நடத்தவே போதுமானதாக இல்லை.  இதனால் பவனின் கல்விக்கான செலவுகளை அவர்களால் கவனிக்க முடியவில்லை.

மற்ற குழந்தைகள் போல் இல்லாமல்  பவன் தனது குடும்பத்தினரின் செலவுகளுக்காக பஸ் நிலையத்திற்கு சென்று பிச்சை எடுத்து வருகிறான்.

இதற்காக ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும்  பள்ளிச் சீருடை அணிந்து கொண்டு, பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளிடம் கையில் உள்ள கிண்ணத்தை நீட்டிப் பிச்சை கேட்கிறான்.

பள்ளிச்சீருடையில் இருக்கும் பவனுக்கு உதவி செய்யும் விதத்தில் அவர்கள் ரூபாய்.1 அல்லது  2 என பிச்சை இடுகின்றனர்.

குடும்பச் செலவுகளுக்கும், படிப்புச் செலவுகளுக்கும் இது போதுமானதாக இல்லாததால்,  பிற பொது இடங்களுக்கும் சென்று பவன் பிச்சை எடுத்து வருகிறான்.

"பவன் வகுப்பில் நன்றாகப் படிப்பவன்.  ஆனால் புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வாங்குவதற்கு போதிய வசதி அவனிடமில்லை" என பவனின் தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.

இதுபற்றி பவன் கூறும்போது,  ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிச்சை எடுப்பதில் 200 ரூபாய் கிடைக்கிறது.  குடும்பத்தில் வசதியே இல்லாவிட்டாலும் தொடர்ந்து பிச்சை எடுத்தே முழுவதும் படித்து முடிக்க தீர்மானித்துள்ளேன்" என கூறியுள்ளான்.

பிச்சை எடுத்தாவது நன்றாகப் படித்து முடிப்பேன் என்று கூறும் பவன் ஒரு முன்னுதாரணச் சிறுவனாக விளங்கி வருகின்றான்.

மூலக்கதை