858 இடத்தில் அனுமதி!= திருப்பூரில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய. அனுமதி கடிதத்தை பெற்றுக்கொள்ள அழைப்பு

தினமலர்  தினமலர்
858 இடத்தில் அனுமதி!= திருப்பூரில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய. அனுமதி கடிதத்தை பெற்றுக்கொள்ள அழைப்பு

திருப்பூர்:விநாயகர் சதுர்த்தியொட்டி, திருப்பூர் நகரில் சிலை வைக்க விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பம் வாயிலாக, 858 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான, கடிதத்தை பெற்று கொள்ளுமாறு போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.வரும், 13ல் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய, 24 நிபந்தனைகளை தமிழக அரசு அறிவித்தது. இதனை தளர்த்த வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் வலியுறுத்தப்பட்டது. மேலும், கலெக்டர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு மனு அளித்தனர். தொடர்ந்து, ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், திருப்பூர் மாநகர போலீஸ் சார்பில், வடக்கு போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில், 'ஒருங்கிணைந்த மையம்' ஏற்படுத்தப்பட்டது. அதில், போலீசார், மாநகராட்சி, மின்வாரியம், தீயணைப்புத்துறையினர் ஆகிய துறைகளை சேர்ந்த அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டனர். ஒரு வாரமாக சிலை வைப்பது தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டு வந்தது. அதில், திருப்பூர் மாநகரில், இந்து முன்னணி, பாரத் சேனா, தமிழ்நாடு விஷ்வ ஹிந்த் பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு, 858 இடங்களில் சிலை வைக்க போலீசார் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், ஏறத்தாழ, 1,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.போலீசார் கூறுகையில், 'சிலை வைப்பது தொடர்பாக ஒருங்கிணைந்த மையம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. வடக்கு ரேஞ்சில், 513 இடத்திலும், தெற்கு ரேஞ்சில், 345 இடங்களிலும் சிலை வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், சிலை அமைக்க கொடுக்கப்பட்ட விண்ணப்பத்துக்கான அனுமதி கடிதம் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் தயாராக உள்ளது. அவற்றை உடனே பெற்றுக் கொள்ளலாம்,' என்றனர்.
காத்திருக்கும் கணபதிதிருப்பூர், அவிநாசி, திருமுருகன் பூண்டி உட்பட சில இடங்களில், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 'பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' கலவையால் தயாரிக்கப்பட்டிருந்த, 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை, மாசு கட்டுப்பாடு வாரிய மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.சிலைகள், அவிநாசி மற்றும் பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை என்ன செய்வது என்ற, குழப்பம், பேரூராட்சி நிர்வாகத்தினருக்கு ஏற்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில்,'விநாயகர் சிலைகளை நீர் நிலையில் கரைக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை. மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் அறிவுறுத்தல் படி செயல்படுவோம்,' என்றனர்.திருப்பூர் மாவட்ட மாசுகட்டுப்பாடு வாரிய மண்டல செயற்பொறியாளர் செந்தில் விநாயகத்திடம் கேட்டதற்கு ''பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை அழிப்பது, அப்புறப்படுத்துவது எங்கள் பணியல்ல. ஆர்.டி.ஓ., தான் முடிவெடுக்க வேண்டும்,'' என்றார். இதனால், என்ன செய்வதென்ேற தெரியாமல் குழப்பத்தின் உச்சியில், பேரூராட்சி அதிகாரிகள் தவிக்கின்றனர்.


மூலக்கதை