அவசர சிகிச்சைக்கு ஆபத்து! கோவை அரசு மருத்துவமனையில். உள்ளே நுழையவிடாமல், 'தடை'

தினமலர்  தினமலர்
அவசர சிகிச்சைக்கு ஆபத்து! கோவை அரசு மருத்துவமனையில். உள்ளே நுழையவிடாமல், தடை

கோவை:'அஞ்சு நிமிஷம் முன்னாடி கொண்டு வந்திருந்தால், காப்பாற்றியிருக்கலாம்' என, டாக்டர்கள் கூறுவதை கேட்டிருக்கலாம். உயிருக்கு போராடும் நோயாளிக்கு, 'கோல்டன் அவர்' எனப்படும் ஒவ்வொரு கடைசி வினாடியும் முக்கியம். ஆனால், பல மைல் துாரத்தில் இருந்து, ஆபத்தான நிலைமையில் ஆம்புலன்சில் கொண்டு வரப்படும் நோயாளிகள், மருத்துவமனையின் முன் நிலவும் நெரிசலால் உயிரிழக்க நேரிடுகிறது.
கோவை அரசு மருத்துவமனை, திருச்சி ரோட்டில் லங்கா கார்னர் அருகே அமைந்துள்ளது.பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனைக்கு வருகின்றன.ஆம்புலன்ஸ்களின் வசதிக்காக, இரு நுழைவாயில்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவமனையின் பிரதான நுழைவாயில் வழியாக, ஆம்புலன்ஸ்கள் அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்கின்றன.ஆனால், இந்த நுழைவாயிலின் முன் நிறுத்தப்படும் பஸ்களால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மருத்துவமனை எங்கே என தேடும் அளவுக்கு, பஸ்கள் மறைத்து நிற்கின்றன.பயணிகளும் அதே இடத்தில் காத்து நிற்பதால், உள்ளே நுழைய முடியாமல்நோயாளிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். இதன் அருகில் அரசின், மலிவு விலை உணவகமும் இருப்பதால், எப்போதுமே இங்கு கூட்ட நெரிசல் இருந்து வருகிறது.நடுரோட்டில் நிறுத்தப்படும் பஸ்களால், அவ்வழியாக பின்னால் வரும் அனைத்து வாகனங்களும், ஸ்தம்பித்து நின்று விடுகின்றன. இந்த நேரத்தில், அவசரமாக வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களால், மருத்துவமனையின் உள்ளே நுழைய முடிவதில்லை.மருத்துவமனை அருகில், சிக்னலுக்கு அருகே யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பஸ் ஸ்டாப் உள்ளது. இந்த பஸ் ஸ்டாப்பில் நிறுத்தப்பட வேண்டிய பஸ்கள் அனைத்தும், மருத்துவமனை நுழைவாயில் முன் நிறுத்தப்படுவதே சிக்கலுக்கு காரணம். தினமும் இவ்வளவு பிரச்னைகள் இருந்தும், போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வது கிடையாது.மருத்துவமனை டீன் அசோகன் கூறுகையில்,''மருத்துவமனை நுழைவாயில் அருகே பஸ்கள் நிறுத்தப்படுவதால் தான், இப்பிரச்னை ஏற்படுகிறது.இதை தவிர்க்க, மருத்துவமனை செக்யூரிட்டிகள் கூட்டத்தை ஒழுங்குபடுத்துகின்றனர். இருப்பினும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஆம்புலன்ஸ் உள்ளே வருவதில் சிக்கல் ஏற்படுகிறது,'' என்றார்.
பஸ் நிறுத்தம், 'புல்!'மருத்துவமனை அருகே உள்ள பஸ் ஸ்டாப்பை, பிச்சை எடுப்பவர்கள், ஆதரவற்றவர்கள் என, பலரும் ஆக்கிரமித்துள்ளனர். இது ஒரு புறம் இருக்க, பஸ் ஸ்டாப் அருகே மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள தற்காலிக கழிப்பறையால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகள் இங்கு நின்று பஸ் ஏறாமல், மருத்துவமனை நுழைவாயில் அருகில் நிற்கின்றனர்.

மூலக்கதை