அமெரிக்காவில் வெங்கையா நாயுடு பேச்சு: இந்து என்ற வார்த்தையை தீண்டத்தகாததாக மாற்ற முயற்சி

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் வெங்கையா நாயுடு பேச்சு: இந்து என்ற வார்த்தையை தீண்டத்தகாததாக மாற்ற முயற்சி

சிகாகோ: ‘‘இந்து என்ற வார்த்தையை தீண்டத்தகாததாகவும், சகிப்புத்தன்மையற்றதாகவும் மாற்ற சிலர் முயற்சிக்கின்றனர்’’ என அமெரிக்காவில் நடைபெற்ற இரண்டாவது உலக இந்து மாநாட்டில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார். விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் பேசி 125 ஆண்டுகளாகி விட்டது. இதை முன்னிட்டு சிகாகோ நகரில் இரண்டாவது உலக இந்து மாநாடு கடந்த 3 நாட்களாக நடந்து வந்தது. இதில் 60 நாடுகளைச் சேர்ந்த 250 பேச்சாளர்கள், 2,500 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதன் நிறைவு நாள் நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாடு கலந்து கொண்டு பேசியதாவது: உலகளாவிய சகிப்புத்தன்மையில் இந்தியா நம்பிக்கை வைத்துள்ளது. அனைத்து மதங்களும் உண்மை என்பதை ஏற்றுக் கொண்டது. நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்வதும், அடுத்தவர் நலனில் அக்கறை செலுத்துவதும்தான் இந்து தத்துவத்தின் முக்கிய அம்சம். இந்து என்ற வார்த்தையை தீண்டத்தகாததாகவும், சகிப்புத்தன்மையற்றதாகவும் மாற்ற சிலர் முயற்சிக்கின்றனர். அதனால் இந்து மதத்தின் மதிப்புகள் பற்றி சரியான விதத்தில் இந்த உலகுக்கு தெளிவாக கூற வேண்டும். சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மையை ஏற்றுக் கொள்வது, பிற விஷயங்களை ஏற்றுக் கொள்வதுதான் இந்துத்துவம். இயற்கையுடன் இணக்கமாக வாழ்வது குறித்தும் இந்து மதம் கற்றுத் தருகிறது. இந்து பண்பாட்டின் முழு உருவம் சுவாமி விவேகானந்தர். ஏற்றுக்கொள்வதையும், சகிப்புத்தன்மையையும் உலகுக்கு கற்றுகொடுத்த நாடு இந்தியா என சுவாமி விவேகானந்தர் கடந்த 1893ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இங்கு நடந்த கூட்டத்தில் பேசினார். இந்தியா உலகுக்கு சிறந்த அறிவை வழங்கும். நாங்கள் பின்பற்றும் பண்புகள் எங்களின் தனிமனித மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறது. இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் நாங்கள் அக்கறை செலுத்துகிறோம். பூமியை இன்னும் நீண்டகாலம் நீடித்திருக்கும் கோளாக மாற்றுவதில் நாங்கள் உதவுகிறோம் இந்தியா ஒரு காலத்தின் ‘விஸ்வ குரு’ (உலகின் ஆசான்) என அறியப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார். அடுத்த உலக இந்து மாநாடு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 2022ம் ஆண்டு நவம்பரில் நடக்கும் என இந்த மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இன்று விவேகானந்தர் தினம்இந்து மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநில கவர்னர் ப்ரூஸ் ரானர், செப்டம்பர் 11ம் தேதியை சுவாமி விவேகானந்தர் தினமாக அறிவித்தார்.

மூலக்கதை