பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் மீதான தேச துரோக வழக்கு அக்.9 முதல் தினமும் விசாரணை: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் மீதான தேச துரோக வழக்கு அக்.9 முதல் தினமும் விசாரணை: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் மீதான தேசத்துரோக வழக்கின் விசாரணை  அடுத்த மாதம் 9ம் தேதி முதல் தினமும் நடைபெறும் என்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் ராணுவ தளபதி பர்வேஷ் முஷாரப். இவர், பிரதமராக இருந்த நவாஷ் ஷெரீப்பின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு கடந்த 1999ல் ஆட்சிக்கு வந்தார். கடந்த 2008 வரை அதிபராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் முந்தைய பாகிஸ்தான் ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), முன்னாள் சர்வாதிகாரி முஷாரப் மீது கடந்த 2013ம் ஆண்டு தேசத்துரோக வழக்குப் பதிவு செய்தது.  இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி யவார் அலி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இதை விசாரணை செய்தது. அப்போது வரும் அக்டோபர் 9ம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும், அன்று முதல் தினமும் இந்த வழக்கு விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிபதிகள் மேலும் கூறுகையில், ‘‘இந்த வழக்கில் வாதங்கள் விரைவில் முடிவடைந்து விடும். எனவே வெளிநாட்டில் உள்ள முஷாரப்பை எப்படி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போகிறீர்கள் என உள்துறை அமைச்சகம் தெரிவிக்க வேண்டும்’’ என்றனர். இது தொடர்பாக முஷாரப்பின் வழக்கறிஞர் அகார் ஷா கூறுகையில், `‘முஷாரப் உடல்நிலை மோசமடைந்துள்ளதால் அவரை பயணம் செய்ய துபாய் மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை. அவருக்கு அதிபர் அந்தஸ்திலான  பாதுகாப்பை தருவதாக அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்’ என்றார். ஆனால், இதற்கு நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மூலக்கதை