கரன்சி வெளிமதிப்பு சரிவால் 7 நாடுகளுக்கு ஆபத்து:'நோமுரா' நிறுவனம் ஆய்வறிக்கை

தினமலர்  தினமலர்

புதுடில்லி:டாலருக்கு நிகரான, அன்னியச் செலாவணி மதிப்பு குறைவால், ஏழு வளரும் நாடுகள், இடர்ப்பாட்டை சந்திக்க வாய்ப்புள்ளதாக, ஜப்பானைச் சேர்ந்த நிதிச் சேவை நிறுவனமான, 'நோமுரா' தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம், 30 வளரும் நாடுகளின் கரன்சி வெளிமதிப்பு தொடர்பான, 'டமோக்ல்ஸ்' குறியீட்டை வெளியிட்டு உள்ளது.இக்குறியீடு, 100 புள்ளிகளை தாண்டினால், அடுத்த, 12 மாதங்களில் இடர்ப்பாட்டை சந்திக்கும்வாய்ப்பும்; 150ஐ தாண்டினால், எந்தநேரமும், பிரச்னை எழலாம் எனவும், கருதப்படுகிறது.
இது குறித்து, நோமுரா வெளியிட்டுள்ள அறிக்கை:முன்னேறிய நாடுகளின் நிதிக் கொள்கையில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது. அவை, உள்நாட்டு வர்த்தகப் பாதுகாப்பில் கவனம் செலுத்துகின்றன. இதனால், வளரும் நாடுகளில் உள்ள இடர்ப்பாடுகள் குறித்து, முதலீட்டாளர்கள் மறுபரிசீலனை செய்கின்றனர். இந்நிலையில், ஏழு வளரும் நாடுகள், அவற்றின் கரன்சிக்கு நிகரான டாலர் விகித மாறுபாடுகளால், இடர்ப்பாட்டை சந்திக்கக் கூடும்.
இந்தியாஅவற்றில், இலங்கை, 175 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில், தென் ஆப்ரிக்கா, 143; அர்ஜென்டினா, 140; பாகிஸ்தான், 136; எகிப்து, 111; துருக்கி, 104 மற்றும் உக்ரைன், 100 ஆகியவை உள்ளன.நடப்பாண்டு, இந்தியாவின் சில்லரை பண வீக்கம், 4.5 சதவீதமாக உள்ளது. இது, 2012ல், 9.7 சதவீதமாக உயர்ந்து இருந்தது. இதே காலத்தில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 5ல் இருந்து, 2 சதவீதமாக சரிந்துள்ளது.ரிசர்வ் வங்கியிடம், போதுமான அன்னியச் செலாவணி கையிருப்பு உள்ளது.அதனால், ஜூலை -செப்., வரையிலான இந்தியாவின் டமோக்ல்ஸ் குறியீடு, 25 சதவீதமாக குறைந்துள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை