ஒரே நாளில், 'சென்செக்ஸ்' 468 புள்ளிகள் சரிவு:ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

தினமலர்  தினமலர்

மும்பை:நேற்று, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத வீழ்ச்சி கண்டது.கடந்த வாரம், வெள்ளியன்று, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீனாவுக்கு விடுத்த எச்சரிக்கை; நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்வு குறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை ஆகியவற்றின் தாக்கம், முதல் வர்த்தகதினமான நேற்று, பங்கு மற்றும் அன்னியச் செலாவணி சந்தைகளில் எதிரொலித்தது.
டிரம்ப் அதிரடி
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ''சீனாவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கும் வரி உயர்த்தப்படும்,'' என, எச்சரிக்கை விடுத்தார்.இதற்கு பதிலடியாக, 'அமெரிக்க பொருட்களுக்கு வரி அதிகரிக்கப்படும்' என, சீனா அறிவித்தது.இதனால், அமெரிக்கா - சீனா இடையே, வர்த்தகப்போர் மேலும் தீவிரமாகும் என்ற முதலீட்டாளர்களின் அச்சம் காரணமாக, சர்வதேச பங்குச் சந்தைகள் சுணக்கம் கண்டன.ரிசர்வ் வங்கியின் அறிக்கையில், இந்தாண்டு, ஏப்., - ஜூன் காலாண்டில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 1,500 கோடி டாலரில் இருந்து, 1,580 கோடி டாலராக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கச்சா எண்ணெய் விலையேற்றத்தால், இறக்குமதி செலவு உயர்ந்து, நடப்பு கணக்கு பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதனால், டாலருக்கான தேவை நேற்று அதிகரித்தது. வர்த்தகத்தின் இடையே, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, இதுவரை இல்லாத அளவிற்கு, 72.67 ஆக வீழ்ச்சி கண்டது.
மூடிஸ்
இந்நிலையில், 'ரூபாய் மதிப்பின் சரிவு தொடர்ந்தால், இந்திய நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும்' என, தர நிர்ணய நிறுவனமான, 'மூடிஸ் இன்வெஸ்டர் சர்வீசஸ்' அறிக்கை வெளியிட்டது. இதுவும், பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு வழி வகுத்தது.மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 38,000 புள்ளிகளுக்கு கீழாக சரிவடைந்தது. இக் குறியீடு, 467.65 புள்ளிகள் சரிந்து, 37,922.17 புள்ளிகளில் நிலை கொண்டது.இந்தாண்டு, மார்ச், 16ல், சென்செக்ஸ், 509.54 புள்ளிகள் வீழ்ச்சி கண்ட பின், நேற்று அதிகபட்ச சரிவைக் கண்டது.
தேசிய பங்குச் சந்தையின், 'நிப்டி' குறியீடு, 150.50 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 11,438.60 புள்ளிகளில் நிலை கொண்டது. இது, இந்தாண்டு, பிப்., 6க்கு பின், ஒரே நாளில் ஏற்பட்ட மிகப் பெரிய சரிவாகும்.சர்வதேச நிலவரங்கள், இந்திய நிதிச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக, பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
நேற்று, அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் இடையே, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, முதன் முறையாக, 72.67 வரை சரிந்தது. உடனே, ரிசர்வ் வங்கி, டாலரை புழக்கத்தில் விட்டு, சரிவை தடுத்தது. இதனால், வர்த்தகத்தின் இறுதியில், ரூபாய் மதிப்பு, ௭௨.௪௫ல் நிலை கொண்டது. இந்தாண்டு, ரூபாய் வெளி மதிப்பு, 13 சதவீதம் சரிவடைந்து உள்ளது.

மூலக்கதை