அருப்புக்கோட்டையில் தாமிரபரணி, வைகை தண்ணீரும் வந்தாச்சு...; தீரல குடிநீர் பிரச்னை

தினமலர்  தினமலர்

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டைக்கு குடிநீர் வழங்கும் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வந்தும், வைகை ஆற்றை திறந்தும் கூட நகரில் குடிநீர் பிரச்னை தீர்ந்தபாடில்லை.அருப்புக்கோட்டைக்கு வைகை மற்றும் தாமிரபரணி திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மழை பொய்த்து விட்டதால் கடந்த இரு ஆண்டுகளாக வைகை ஆறு வறண்டு போய் விட்டது.
இதனால் அருப்புக்கோட்டைக்கு குடிநீர் வருவது நின்றது. இருக்கிற தாமிரபரணி தண்ணீரை வைத்து நகராட்சியில் குடிநீர் தேவையை சமாளித்து வந்தனர். ஒரு வாரத்திற்கு 1 பகுதி என சுழற்சி முறையில் இருந்தது நாளடைவில் 20 நாட்களுக்கு ஒரு பகுதி என வழங்கப்பட்டது.கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையில் தாமிரபரணியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. வைகை ஆற்றிலும் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது 2 ஆறுகளில் தண்ணீர் ஓடியும் அருப்புக்கோட்டையின் குடிநீர் பிரச்னை தீர்ந்தபாடில்லை. கடந்த இருநாள் முன்பு தாமிரபரணி குடிநீர் வரும் பகிர்மான குழாய் உடைந்ததால் குடிநீர் விநியோகம் தடைபட்டது. தற்போது வைகையில் இருந்து வரும் 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வைத்து தான் விநியோகம் செய்யப்படுகிறது. இரண்டு ஆறுகளில் இருந்து போதுமான அளவில் தண்ணீர் இருந்தாலும் ஏதாவது பிரச்னையில் குடிநீர் விநியோகம் தடைபடுகிறது. போர்கால அடிப்படையில் குழாய்களை சரி செய்து நகருக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.

மூலக்கதை