ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பிரியா நகர் சாலையால் மக்கள் அவதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பிரியா நகர் சாலையால் மக்கள் அவதி

கூடுவாஞ்சேரி:  சென்னை அடுத்த ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள பல்வேறு நகர் பகுதிகளுக்கு செல்ல, கூடுவாஞ்சேரிக்கும் ஊரப்பாக்கத்துக்கும் இடையே உள்ள ரயில்வே தண்டவாளத்தின் குறுக்கே பிரியா நகரில் இருந்து எம்ஜி நகருக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இவை தண்டவாளத்தின் குறுக்கே உள்ளதால் அந்த சாலை நீண்ட காலமாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது.

மேலும் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து திறந்து விடப்படும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால், சேறும் சகதியுமாக மாறி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

இந்த சாலை வழியாக ஊரப்பாக்கம் பகுதிக்கு செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட அனைத்து தரப்பினரும் வாகனங்களில் செல்லும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். கழிவுநீர் உடையில் பட்டு அசுத்தமாகுகிறது.

இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி சம்பந்தப்பட்ட ஊராட்சி, மாவட்ட அதிகாரிகளிடம் பலமுறை இப்பகுதி மக்கள் வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, சாலையை உடனடியாக சீரமைக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.

.

மூலக்கதை