பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங். போராட்டம் திருவள்ளூரில் 50% காஞ்சிபுரத்தில் 65% கடைகள் அடைப்பு: பஸ்கள் வழக்கம் போல இயங்கியது

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங். போராட்டம் திருவள்ளூரில் 50% காஞ்சிபுரத்தில் 65% கடைகள் அடைப்பு: பஸ்கள் வழக்கம் போல இயங்கியது

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்திருந்தது. இதற்கு சிஐடியூ, தொமுச, எச்எம்எஸ் உட்பட 10 முக்கிய தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 65 சதவீத கடைகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 50 சதவீத கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள் வழக்கம் போல ஓடியது.

அதன் விவரம்:

திருவள்ளூர்
 ஆளும் அதிமுக அரசு, அண்ணா தொழிற்சங்கத்தினரை வைத்து திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. முக்கிய பஸ் நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் வழக்கம் போல ஓடியது. அம்மையார்குப்பத்தில் அரசு பஸ்சை சிறைபிடித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் செய்தனர்.

ஆர். கே. பேட்டையில் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் தங்கவேலு தலைமையிலும், பள்ளிப்பட்டு பகுதியில் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி வெங்கட்ராஜா தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. பூந்தமல்லி, போரூர், மதுரவாயல், செங்குன்றம், சோழவரம், புழல், மீஞ்சூர், பொன்னேரி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, மாதர்பாக்கம், ஆரம்பாக்கம், எளாவூர், கவரப்பேட்டை ஆகிய பகுதிகளில் கடைகள் திறந்திருந்தது.

பெரியபாளையம், தாமரைப்பாக்கத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. திருத்தணி நகராட்சி அலுவலகம் அருகே சிஐடியு சார்பில் சாலை மறியல் நடந்தது.

30 பேர் கைது செய்யப்பட்டனர்.   அனைத்து இடங்களிலும் பஸ்கள் வழக்கம் போல ஓடியது.

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் நகரில் பாதியளவு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பட்டு சேலை கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தன.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராஜாஜி மார்க்கெட், நேரு மார்க்கெட் திறந்திருந்தது. பஸ்கள் வழக்கம் போல ஓடியது.

காஞ்சிபுரம் மண்டலத்தில் இயக்கப்படும் 725 பஸ்களில் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

காஞ்சிபுரம், ஓரிக்கை, செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம், கல்பாக்கம் போன்ற பணிமனைகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் 80 சதவீதம் கடைகள், மார்க்கெட்கள் அடைக்கப்பட்டிருந்தது.

செங்கல்பட்டு மேட்டு தெருவில் உள்ள பெரிய காய்கறி மார்க்கெட் மூடப்பட்டிருந்தது. 50 சதவீத ஆட்டோக்கள் ஓடவில்லை.

ரயில் நிலையத்திலும் பயணிகளின் கூட்டம் குறைவாக இருந்தது. உத்திரமேரூர், சாலவாக்கம், திருப்புலிவனம், மானாமதி, பெருநகர், எண்டத்தூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருப்போரூர், கேளம்பாக்கம், கூடுவாஞ்சேரி, வண்டலூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

பஸ்கள் வழக்கம் போல இயங்கியது.

ஆனால் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.

.

மூலக்கதை