சிபிஐ சோதனையில் முறைகேடு அம்பலம் திருச்சி விமான நிலையத்தில் 41 பேர் அதிரடி மாற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சிபிஐ சோதனையில் முறைகேடு அம்பலம் திருச்சி விமான நிலையத்தில் 41 பேர் அதிரடி மாற்றம்

திருச்சி: வெளிநாட்டில் இருந்து திருச்சிக்கு தங்கம் கடத்தப்படுவதாகவும், தங்கம் கடத்தலுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் வந்த தகவலையடுத்து சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு கடந்த 5ம் தேதி விமானத்தில் வந்த பயணிகளிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். சந்தேகத்திற்குரிய பயணிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள், பணியாளர்களிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது.

கடத்தல்காரர்களுக்கு சுங்கதுறை அதிகாரிகள் உள்ளிட்ட 6 பேர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. சுங்கத்துறை உதவி ஆணையர் வெங்கடேசலு, கண்காணிப்பாளர்கள் கலுகாசல மூர்த்தி, ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் அனீஷ்பாத்திமா, பிரசாந்த் கவுதம், சுங்கத்துறை ஊழியர் எட்வர்டு ஆகிய 6 பேர் மற்றும் வியாபாரிகள் போர்வையில் கடத்தல் தொழில் ஈடுபட்ட பயணிகள் 13 பேர் என மொத்தம் 19 பேர் மீது வழக்கு பதிந்த சிபிஐ அதிகாரிகள் அனைவரையும் கைது செய்தனர்.

கைதான 19 பேரும் மதுரை சிபிஐ சிறப்பு கோர்ட் நீதிபதி கணேசன் முன் கடந்த 7ம் தேதி ஆஜர்ப் படுத்தப்பட்டு மதுரை சிறை யில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சிபிஐ சோதனையில் முறைகேடுகள் எதிரொலியாக திருச்சி விமான நிலையத்தில் பணியாற்றிய சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து பிரிவை சேர்ந்த ஊழியர்கள் பெரும்பாலானோர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சுங்கத்துறையில் மொத்தம் 34 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், விமான நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள் 5 பேரும் மாற்றப்பட்டுள்ளனர்.

இது தவிர விமான சரக்கு முனையம் (கார்கோ) பிரிவிலும் கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர் ஆகியோரும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை திருச்சி சுங்கத்துறை இணை ஆணையர் முகமது நவ்பால் வெளியிட்டுள்ளார்.

பணியிட மாற்றம் செய்யப்பட்டோர் வரும் 12ம் தேதிக்குள் பணியில் சேருமாறு வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலைய சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர்களாக நிர்மலா ஜோயல், அனுஜ்குமார், ரஜித்குமார், ஹேமந்த்யாதவ், யதுவேந்தர் சிங், நரேந்திரகுமார் (கார்கோ), ரவிகேஷ்குமார் கேசன்(கார்கோ) ஆகியோர் பொறுப்பேற்க உள்ளனர்.

.

மூலக்கதை