மீனுக்கு வீசிய வலையில் முதலை சிக்கியது

தமிழ் முரசு  தமிழ் முரசு
மீனுக்கு வீசிய வலையில் முதலை சிக்கியது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் உள்்ள மீன் குட்டையை இலந்தை கூடத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் மீன் பிடிப்பதற்கு குத்தகை எடுத்துள்ளார். குட்டையிலிருந்து மீன் பிடிப்பதற்காக சக்திவேல் வலைவீசினார்.

அந்த வலையை ஏதோ கடித்து இழுத்தது. குட்டையில் பெரிய மீன்கள் கிடக்கிறது என கருதிய சக்திவேல் மீண்டும் வலை வீசினார்.

சிறிது நேரம் கழித்து சக்திவேல் வலையை வெளியே இழுத்தார். இழுக்க மிகவும் கஷ்டமாக இருந்ததால் பெரிய மீன் சிக்கி விட்டதாக எண்ணி சக்திவேல் மெதுவாக வலையினை கரையை நோக்கி இழுத்து பார்த்தபோது அதில் 20 கிலோ எடையுள்ள ஒரு வயதே ஆன முதலை குட்டி ஒன்று சிக்கி இருப்பதை கண்டு சக்திவேல் அலறி அடித்தபடி கரைக்கு ஓடிவந்தார்.

சக்திவேலின் அலறலை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து முதலையை கரையில் இழுத்து விட்டனர்.

பின்னர் அரியலூர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் பிடிபட்ட முதலையை அரியலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கரையில் கொள்ளிட ஆற்றில் கொண்டு விடுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மீன் வலையில் 20 கிலோ எடையுள்ள ஒரு வயது முதலை குட்டி சிக்கியதால் தாய் முதலையுடன் இன்னும் பல முதலைகள் அங்கு இருக்கலாம் என திருமழபாடி கிராம பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

.

மூலக்கதை