முக்கொம்பு ேபாலவே கல்லணை கால்வாய் மதகுகள் பலவீனம்?

தமிழ் முரசு  தமிழ் முரசு
முக்கொம்பு ேபாலவே கல்லணை கால்வாய் மதகுகள் பலவீனம்?

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து பிரியும் கல்லணை கால்வாய் 100 கி. மீ. தூரத்திற்கு சென்று 2,70,621 ஏக்கர் பாசனத்திற்காகவும், குடிநீர் ஆதாரமாகவும் பயன்படுகிறது.

கல்லணை கால்வாய் பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, நாகுடி, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கடைமடை பகுதிக்கு பிரதான கால்வாயாகும். கல்லணை கால்வாயில் 2,600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லவில்லை.

தஞ்சை பூக்காரத்தெரு பகுதி வழியாக செல்லும் கல்லணை கால்வாயில் கடந்த 1927ம் ஆண்டு 20 கண்மாய் வைத்து ஷட்டருடன் மதகு கட்டப்பட்டது. அந்த ஷட்டர்களை சீரமைப்பதற்காக செல்லும் பணியாளர்களுக்கு நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

சில வருடங்களாக இப்பாலத்தை பராமரிப்பு செய்யாமல் விட்டுவிட்டதால் பக்கவாட்டு சுவர்கள் சிதைந்தும், பெயர்ந்தும், ஷட்டர்கள் பழுதாகியும், 20 கண் பாலத்தின் சுவரில் செடிகள் முளைத்துள்ளதால் பாலத்தின் நிலை கேள்வி குறியாகி உள்ளது.

கடந்த ஜூலை 22ம் தேதி கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டபோது, 20 கண் பாலத்திலுள்ள மரம், செடி, கொடிகளை அகற்றி வர்ணம் அடித்தனர். ஆனால் ஷட்டர்களின் உள்ளே உள்ள மரம் செடிகளை அகற்றவில்லை.

இந்த மரம், செடிகள் வளர்ந்தால் பாலம் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது. பாலத்தின் மேல் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என உத்தரவு உள்ளது.

ஆனால் இரவு நேரங்களில் கனரக வாகனங்களை சிலர் இப்பாலத்தின் வழியாக இயக்குகின்றனர். இதனால் பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.

ஏற்கனவே கல்விராயன்பேட்டை என்ற இடத்தில் கல்லணை கால்வாய் கரையில் உடைப்பெடுத்து பல நாட்கள் தண்ணீர் வீணானது.

முக்கொம்பில் உடைப்பெடுத்து தண்ணீர் இன்றுவரை வீணாகி கொண்டு இருக்கும் நிலையில் பொதுப்பணித்துறை இன்னும் மெத்தனமாக இருக்காமல், அனைத்து மதகுகளையும் ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும்.

குறிப்பாக தஞ்சை பூக்காரத்தெரு கல்லணை கால்வாயின் 20 கண் பாலத்தில் முளைத்து வரும் செடி, கொடிகளை அகற்றி பாலத்தின் ஓரத்தில் சிதைந்துள்ள பக்கவாட்டு சுவர்களை உடனே சீரமைக்க வேண்டும்.

பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல முடியாத வகையில் இரும்பு தடுப்பு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

.

மூலக்கதை