டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மீனவர்கள் ஸ்டிரைக்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மீனவர்கள் ஸ்டிரைக்

மணமேல்குடி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகத்தில் பந்த்துக்கு ஆதரவாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விசைப்படகு ஒன்றுக்கு மாதந்தோறும் 2500 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது.

அரசால் வழங்கப்படும் மானிய டீசல் 1800 லிட்டர் போக மீதியை தனியார் டீசல் மையங்களில் கூடுதல் விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. அரசால் தற்போது லிட்டருக்கு ரூ. 14 மானியம் வழங்கப்படுகிறது.
தற்போது டீசல் விலை லிட்டர் ரூ. 80ஐ நெருங்கியுள்ளது.

இந்த கிடுகிடு விலை ஏற்றத்தால் மீனவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் இன்று திமுக மற்றும் அனைத்து கட்சியினர் சார்பில் பந்த் நடைபெறுகிறது.

இதற்கு ஆதரவு தெரிவித்து மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைபட்டினம் மற்றும் மீனவ கிராமங்களில் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. 500க்கும் மேற்பட்ட விசைபடகுகள் மீன் இறங்குதளங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை.

தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 301 விசைபடகுகள், 4 ஆயிரம் நாட்டுப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை.

நாகை அக்கரைப்பேட்டையில் திருவிழா நடப்பதால் அந்த பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. வேதாரண்யம், பூம்புகார், தரங்கம்பாடி மீனவர்கள் வழக்கம்போல் இன்று கடலுக்கு சென்றனர்.

ராமேஸ்வரம்: பாம்பன் மீனவர்கள் காலவரையற்ற நேற்றே வேலைநிறுத்த போராட்டத்தை துவங்கினர்.

இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் தங்கச்சிமடம் உள்பட ராமேஸ்வரம் மாவட்ட மீனவரகள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

கன்னியாகுமரி உள்பட தமிழகம் முழுவதும் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. விசைப்படகு மீனவர்களின் வேலைநிறுத்தத்தால், படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.

புதுகை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 11 மீனவ கிராமங்களை சேர்ந்த 7 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

.

மூலக்கதை