ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற தருணுக்கு அவிநாசியில் உற்சாக வரவேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற தருணுக்கு அவிநாசியில் உற்சாக வரவேற்பு

அவிநாசி: இந்தோனேசியாவில் நடந்த 18வது ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று ஊர் திரும்பிய அவிநாசியை சேர்ந்த தருணுக்கு மலர்கிரீடம் அணிவித்தும், பரிவட்டம் கட்டியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி சின்னேரிபாளையம் ஊராட்சி ராவுத்தம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி.

விவசாயி. இவரது மனைவி பூங்கொடி.

இவர்களது மகன் தருண் (22). இவர் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடந்த 18வது ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீ. , தடை தாண்டும் ஓட்டத்தில் வெற்றி இலக்கை 48. 46 நொடியில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தார்.

போட்டி முடிந்து நேற்று தருண், சொந்த ஊருக்கு வந்தார்.

அவிநாசியில் அவருக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் சார்பில் மேள தாளங்களுடன் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவிநாசியை சேர்ந்த நகைக்கடை அதிபர், ஒரு பவுன் மோதிரத்தை தருணுக்கு பரிசாக வழங்கினார். சால்வை, மலர்க்கிரீடம் அணிவித்து ஊர் பொதுமக்கள் அவரை, அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

அங்கு பரிவட்டம் கட்டி மரியாதை அளிக்கப்பட்டது.
தருண் கூறுகையில், `தாய்நாட்டிற்காக பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

மத்திய, மாநில அரசுகள் எனக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி உற்சாகம் அளித்தது.

இனி வரும் போட்டிகளில் நிச்சயம் தங்கம் வெல்வேன்’ என்றார்.

.

மூலக்கதை