தொடர் சரிவில் ரூபாய் மதிப்பு : 72.45 ஐ எட்டியது

தினமலர்  தினமலர்
தொடர் சரிவில் ரூபாய் மதிப்பு : 72.45 ஐ எட்டியது

மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இன்றும் (செப்.,10) ரூபாய் மதிப்பு வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது.

செப்., 7 ம் தேதி வர்த்தக நேர இறுதியில் 71.73 ஆக இருந்த ரூபாய் மதிப்பு இன்று காலை வர்த்தக நேர துவக்கத்தின் போது 45 காசுகள் சரிந்து 72.15 ஆக இருந்தது. சிறிது நேரத்தில் மேலும் சரிந்து 72.18-ஆகவும், பிற்பகலில் மேலும் சரிந்து அதிர்ச்சி தந்தது. 1 மணி நிலவரப்படி ரூபாய் மதிப்பு 94 காசுகள் சரிந்து 72.67 ஆக இருந்தது. பின்னர் வர்த்தகநேர முடிவில் 72.45ஆக முடிந்தது. சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் முன்பு எப்போதும் இல்லாத கடும் சரிவை எட்டியது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தின் காரணமாக எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் அமெரிக்க டாலரை அதிகம் வாங்கினர். இதனால் டாலரின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக போர் தீவிரமடைந்தால் அதுவும் ரூபாய் மதிப்பு சரிய அதிக காரணமாக அமைந்ததாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை