தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு தபால் தலை வெளியிடப்படும் : ஐ.நா. அறிவிப்பு

தினகரன்  தினகரன்
தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு தபால் தலை வெளியிடப்படும் : ஐ.நா. அறிவிப்பு

நியூயார்க் : தீபாவளி பண்டிகைக்கு பெருமை சேர்க்கும் விதத்தில், அடுத்த மாதம் சிறப்பு தபால் தலை வெளியிடப்படும் என்று ஐ.நா., சபை அறிவித்துள்ளது.நாடு முழுவதும தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 6ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில், சிறப்பு தபால் தலை வெளியிட ஐ.நா. சபை முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் மாதம் 19ம் தேதி, நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா தலைமை அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு தபால் தலை வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. அந்த சிறப்பு தபால் தலையில் அகல்விளக்கு ஒளிரும் படமும், அதன் பின்னணியில் ஐ.நா. தலைமையகமும், \'மகிழ்ச்சியான தீபாவளி\' என்ற வாழ்த்தும் இடம்பெறும என்று கூறப்பட்டுள்ளது. ஒரு தாளில் 10 சிறப்பு தபால் தலைகள் இருக்கும் என்றும், அதன் விலை 1.15 டாலர் என்றும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தீபாவளிக்கு சிறப்பு தபால் தலை வெளியிடப்படும் என்ற ஐ.நா. அறிவிப்பை இந்தியா வரவேற்றுள்ளது. இதுகுறித்து இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி துாதர் சயத் அக்பருதீன் தனது டிவிட்டர் பக்கத்தில், தீபாவளிக்கு ஐ.நா.வின் அருமையான பரிசு இது என குறிப்பிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஏற்கனவே 2016ல் அமெரிக்காவும், கடந்த ஆண்டு கனடாவும் தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு தபால் தலை வெளியிட்டு பெருமைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை