வாட்ஸ்அப் பழக்கமுள்ள மணப்பெண் வேண்டாம்: திருமணத்தை நிறுத்தியால் போலீசார் விசாரணை

தமிழ் முரசு  தமிழ் முரசு
வாட்ஸ்அப் பழக்கமுள்ள மணப்பெண் வேண்டாம்: திருமணத்தை நிறுத்தியால் போலீசார் விசாரணை

அம்ரோஹா: உத்தரபிரதேசத்தில், ‘தொடர்ந்து வாட்ஸ் அப்பில் ‘சேட்’ செய்யும் பழக்கமுள்ள மணப்பெண் வேண்டாம்’ எனக்கூறி திருமணத்தை நிறுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோஹா மாவட்டம் நௌகான் சதத் என்ற கிராமத்தைச் சேர்ந்த உரோஜ் மெஹந்தி என்பவர், தனது மகளை பகீர்புரா கிராமத்தைச் சேர்ந்த கமர் ஹைதர் என்பவரது மகனுக்கு நிச்சயம் செய்தார்.

தொடர்ந்து, மணப்பெண் குடும்பத்தினர் சார்பில் நௌகான் சதத் கிராமத்தில் கடந்த 5ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அன்றைய தினம் நீண்ட நேரமாகியும் மணமகனின் குடும்பத்தினர் வராததால், அதிர்ச்சியடைந்த உரோஜ் மெஹந்தி தொலைபேசியில் கமர் ஹைதரை தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, திருமணத்தை ரத்து செய்வதாக கமர் ஹைதர் தெரிவித்துள்ளார். இதற்கான காரணத்தை கேட்டபோது, ‘மணமகள் நீண்ட நேரம் வாட்ஸ்அப்பில் ‘சேட்’ செய்யும் பழக்கம் உடையவராக உள்ளார்.
 
அதனால், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள எனது மகன் மறுத்துவிட்டான்.

அதனால், இந்த திருமணத்தை ரத்து செய்துவிடலாம்’ என்றார். இதுெதாடர்பாக, உரோஜ் மெஹந்தி உள்ளூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து, அம்ரோஹா போலீஸ் எஸ்பி விபின் தடா கூறியதாவது: மணமகள் நீண்ட நேரம் வாட்ஸ் அப்பில் சேட் செய்வதாகவும், மணமகனின் சகோதரர்களிடமும் அவர் சேட் செய்ததாகவும், மணமகனின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து, உரோஜ் மெஹந்தியிடம் விசாரித்தபோது, மணமகனின் குடும்பத்தினர் ரூ. 65 லட்சத்தை வரதட்சணையாக கேட்டதாகவும், அதை தராததால் திருமணத்தை அவர்கள் நிறுத்திவிட்டதாகவும் கூறினார்.

இருந்தும், தொடர் விசாரணை நடக்கிறது. இவ்வாறு விபின் தடா கூறினார்..

மூலக்கதை