பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பந்த் குமரியில் 12 அரசு பஸ்கள் உடைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பந்த் குமரியில் 12 அரசு பஸ்கள் உடைப்பு

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் பந்த் நடக்கிறது. தமிழகத்தில் முழு அளவில் இதற்கு ஆதரவு உள்ளது.

குமரியில் 12 அரசு பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டன. திருச்சி மாநகரில் இன்று காலை வழக்கம் போல பஸ்கள் ஓடியது.

அதே நேரத்தில் ஆட்டோ, டாக்சி போன்ற வாகனங்கள் இயக்கப்படவில்லை. தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களிலும் 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

டெல்டா மாவட்டங்களில் காலையில் பஸ் போக்குவரத்து வழக்கம் போல காணப்பட்டது. கோவை, திருப்பூரில் 70 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வழியாக தமிழகம் - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் திண்டுக்கல் - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

இச்சாலை வழியாக தமிழகத்திலிருந்து கர்நாடகாவில் உள்ள முக்கிய நகரங்களான பெங்களுரு, மைசூரு, சாம்ராஜ்நகர், கொள்ளேகால், குண்டல்பேட் உள்ளிட்ட நகரங்களுக்கு தமிழக அரசு பஸ்களும், கோவை, ஈரோடு, திருப்பூர், மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கும் இருமாநில கர்நாடக அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

பந்த் காரணமாக சத்தியமங்கலம் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு இயக்கப்படும் தமிழக அரசுப்பேருந்துகளும், கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் அரசு பஸ்களும் இன்று அதிகாலை முதல் இயக்கப்படாததால் பண்ணாரி சோதனைச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது. மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பெரும்பாலான போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் 70 சதவீத பஸ்கள் ஓடவில்லை.

லாரி, ஆட்டோ மற்றும் வாடகை வாகனங்களும் 70 சதவீதம் இயக்கப்படவில்லை. 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 50 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் 80 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன.

குறைந்த அளவே கடைகள் அடைக்கப்பட்டன.

பஸ்கள் உடைப்பு
குமரி மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

குறைவான வாகனங்களே இயங்கின. மார்த்தாண்டம், திங்கள்நகர், கருங்கல், புதுக்கடை, குளச்சல் உள்பட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டு இருந்தன.

மாவட்டத்தில் மொத்தம் 12 அரசு பஸ்களின் கண்ணாடிகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டன. திருவனந்தபுரம் செல்லும் அனைத்து பஸ்களும் களியக்காவிளை வரையே இக்கப்பட்டன.

இதேபோல் கேரள மாநிலத்தில் இருந்து பஸ்கள் குமரிக்கு வரவில்லை.

புதுச்சேரி
பாரத் பந்தையொட்டி புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

அரசு, தனியார் பஸ்கள் முற்றிலும் ஓடவில்லை. மார்க்கெட்டுகள், கடைகளும் மூடப்பட்டதால் முக்கிய சாலைகள் வெறிச்சோடின.

பந்த் போராட்டம் காரணமாக புதுவையில் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டன. இன்று நடைபெறவிருந்த காலாண்டு தேர்வுகள் வேறு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டன.

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 75 சதவீத லாரிகள், ஆட்டோக்கள் ஓடவில்லை.

இதேபோல் பெரும்பாலான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

.

மூலக்கதை