பூசணி விலை குறைந்தது:வருத்தத்தில் விவசாயிகள்

தினமலர்  தினமலர்

தேனி:கேரள வெள்ள பாதிப்பு காரணமாக, ஓணம் பண்டிகை பெரும்பாலான பகுதியில் கொண்டாடப் படவில்லை. இதனால், தேனியில் இருந்து கேரள மாநிலம் செல்லும் வெள்ளைப்பூசணி, வெள்ளரி, சர்க்கரைப்பூசணி உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.
மாவட்டத்தின் குன்னுார், காமயக்கவுண்டன்பட்டி, கொடுவிலார்பட்டி, நாகலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளைப்பூசணி, சர்க்கரைப் பூசணி, பெருவெள்ளரி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தேனி வாரச்சந்தைக்கு வெள்ளரி, வெள்ளை பூசணி, சர்க்கரைப் பூசணி தினமும் 20 டன் அளவில் விற்பனைக்காக வருகிறது.
ஆண்டுதோறும் சீசன் காலங்களில் தேனி வாரச் சந்தையில் இருந்து 20 முதல் 25 டன் அளவில் பூசணி, வெள்ளரி கேரளா சென்றது. தற்போது 15 முதல் 17 டன் அளவில் குறைவாக செல்கிறது. கேரள மாநிலத்தில் வெள்ள நிவாரண பணிகள் நடப்பதால் பண்டிகை கொண்டாடப்படவில்லை. வெள்ளரி கிலோ ரூ.8, வெள்ளைப்பூசணி கிலோ ரூ.7 ஆகவும் விலை உள்ளது.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இருப்பினும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் தேவை உள்ள இடங்களான காயங்குளம், சங்கணஞ்சேரி, ஆலுவா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம் உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.தேனி எம்.ஜி.ஆர்., கமிஷன்மண்டி உரிமையாளர் அறிவழகன் கூறியதாவது: எந்தாண்டிலும் இல்லாத அளவில் இந்தாண்டு கேரள மாநிலத்தில் அதிகளவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிப்பில் இருந்து கேரள மாநில மக்கள் இன்னும் மீள வில்லை. அதனால் முன்பிருந்த விற்பனை தற்போது இல்லை. விலையும் பன்மடங்கு குறைந்துள்ளது. மிக முக்கியமாக ஓணம் பண்டிகை பல இடங்களில் கொண்டாடப்படாததும் விலை குறைவுக்கு முக்கியக் காரணம், என்றார்.

மூலக்கதை