20 ஆயிரம் இணைப்புக்கு ஒரு ஊழியர் : இருளில் தவிக்கும் கிராமத்து மக்கள் அவதி

தினமலர்  தினமலர்

காரைக்குடி:கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் ஊழியர்கள் இல்லாததால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கானாடுகாத்தான் துணை மின் நிலையத்திலிருந்து பள்ளத்துார், கோட்டையூர், ஓ.சிறுவயல், கொத்தமங்கலம், கொத்தரி, ஆத்தங்குடி, நேமத்தான்பட்டி, செட்டிநாடு, சொக்கம்பட்டி, திருவேலங்குடி, ஆவுடைபொய்கை, நெற்புகப்பட்டி, நங்கம்பட்டி, பூவாண்டிபட்டி, காயாம்பட்டி, வடகுடி, மணச்சை உள்ளிட்ட 50 கி.மீ., சுற்றளவில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது.
20 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. 30-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள், செட்டிநாடு கால்நடை பண்ணை, செட்டிநாடு பாலிடெக்னிக், மானாவாரி ஆராய்ச்சி நிலையம், திறந்தவெளி சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லுாரிகள் உள்ளன. மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத தலமாக கானாடுகாத்தான் உள்ளது.
ஆனால், இங்குள்ள துணை மின்நிலையத்தில் ஒரே ஒரு ஒயர்மேன், ஒரு போர்மேன் மட்டுமே பணியில் உள்ளனர்.கே.எஸ்.ரவி, பள்ளத்துார்: மின்வாரியத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் இப்பகுதியில் மின் இணைப்பு கட்டானால் பல நாட்கள் கிராம மக்கள் இருளில் தவிக்கின்றனர். சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
கானாடுகாத்தான், வேலங்குடி, பள்ளத்துாரில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் உள்ளது. மழை நேரங்களில் இங்கு இணைப்பு கட்டானால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, கூடுதலாக ஒயர்மேன் மற்றும் உதவியாளர்களை நியமிக்க வேண்டும், என்றார்.

மூலக்கதை