திருப்புல்லாணியில் மணல் கொள்ளை : கண்டுகொள்ளாத அதிகாரிகளால் பாதிப்பு

தினமலர்  தினமலர்

திருப்புல்லாணி:ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணியில் மணல் கொள்ளையர்களால் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் கண்டு கொள்ளாத அவல நிலை உள்ளது.
திருப்புல்லாணி பகுதியில் வானம் பார்த்த பூமியான இப்பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரத்திற்காக பிள்ளையார் கூட்டம், மதகு கூட்டம், கூத்தியார் கூட்டம், சக்கரை தீர்த்தம், பி.குட்டம்,செட்டிய ஊரணி, அய்யா ஊரணி ஆகிய ஊரணிகள் உள்ளது. மழை நேரங்களில் இதில் தேங்கும் தண்ணீர் மக்கள் பயன்பாட்டிற்கும், கால்நடைகளுக்கு குடி நீராகவும், நிலத்தடி நீர் ஆதாரமாகவும் பயன்பட்டு வருகிறது.
மணல் கொள்ளை: பிள்ளையார் கூட்டம் ஊரணியில் துார் வார கீழக்கரை தாசில்தார் ராஜேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். ஊரணியின் உள் பகுதியில் 3 அடி மட்டுமே துார் வார வேண்டும். இந்த விதிமுறைகளை மீறி மணல் கொள்ளையர்கள் கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் மணல் எடுத்து வருகின்றனர். 15 அடி ஆழம் வரை மணல் அள்ளும் இயந்திரம் மூலம் இரவு, பகலாக தொடர்ந்து மணல் எடுத்து வருகின்றனர்.
அலட்சியம்: விதி முறைகளை மீறி மண் எடுப்பது குறித்து அப்பகுதி மக்கள் தாசில்தார், கலெக்டர் அலுவலக மனு நீதிநாளில் புகார் மனு கொடுத்துள்ளனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். மணல் கொள்ளையர்கள் ஊரணியை துார் வாருகிறோம் என்ற பெயரில் மணல் கொள்ளையடித்து வருகின்றனர்.
கே.ராமச்சந்திரன் கூறுகையில், ''திருப்புல்லாணி பகுதியில் ஊரணி துார் வாருகிறோம் என்ற பெயரில் விதிமுறைகளை மீறி மணல் கொள்ளையர்கள் இரவு பகல் பாராது மணல் அள்ளும் இயந்திரம் மூலம் மணல் எடுத்து வருகின்றனர்.
இது குறித்து கலெக்டர், தாசில்தாரிடம் புகார் மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.இப்பகுதியில் ஓ.என்.ஜி.சி எரி வாயு கிணறுகள் உள்ளதால் அதிக ஆழம் எடுக்கும் போது பூமியில்வெடிப்பு ஏற்படுகிறது. மக்கள் அச்சத்தில் உள்ளனர். மணல் அதிகளவு எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும் நிலை உள்ளது,''என்றார்.
சரவண பாண்டியன் கூறுகையில்,''திருப்புல்லாணியை சுற்றி ஊரணிகள் உள்ளது. இதில் ஒவ்வொரு ஊரணியும் நிறைந்து மற்ற ஊரணிகளுக்கு தண்ணீர் செல்லும் நிலை இருந்தது.மணல் கொள்ளை காரணமாக அடுத்த ஊரணிகளுக்கு தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது.மோட்டார் இயந்திரம் பொருத்தி தான் ஆதி ஜெகநாதபெருமாள் கோயில் சக்கரை தீர்த்த குளத்திற்கு தண்ணீர் எடுக்கும் நிலை உள்ளது.
இதற்கு காரணம் அளவுக்கதிமாக மணல் கொள்ளை போவது தான்,'' என்றார்.எஸ்.வி.பாலசுப்பிரமணியம் கூறுகையில்,'' கடந்த ஆண்டு கூத்தியார் குட்டம் ஊரணி துார் வாருகிறோம் என்ற பெயரில் மணல் கொள்ளை நடந்தது. அளவுக்கு அதிகமாக ஆழம் தோண்டியதால், உப்பு நீர் ஊற்று ஏற்பட்டது. இந்த ஊரணியில் மணல் எடுக்க கூடாது, என பிரச்னைகள் செய்த பின்பு அதிகாரிகள் மணல் எடுப்பதை நிறுத்தினர்,''என்றார்.
தாசில்தார் ராஜேஸ்வரி கூறுகையில்,''ஊரணி துார் வாருவதற்கான அனுமதியை வழங்கினேன். 3 அடி ஆழத்திற்கு மேல்மணல் எடுப்பது தெரியாது.இது குறித்து ஊரணியை பார்வையிடுகிறேன்,'' என்றார்.
துார் வார உத்தரவிடுவதோடு அதிகாரிகள் நிறுத்தி கொள்கின்றனர். உரிய அளவு ஆழம் தோண்டப்படுகிறதா, விதி மீறல்கள் உள்ளதா, என்று கண்காணிப்பது இல்லை.அதிகாரிகள் உத்தரவு கிடைத்தவுடன் மணல் கொள்ளையர்கள் தங்களது வேலையை தெளிவாக செய்கின்றனர். இது தெரியாதது போல் அதிகாரிகள் நடிக்கின்றனர்.இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூலக்கதை