காவிரி குடிநீர் வினியோக பணி பருவமழைக்கு முன் முடிக்க திட்டம்:அனைத்து ஊராட்சிகளிலும் வெள்ளோட்டம்

தினமலர்  தினமலர்

வத்தலக்குண்டு:வத்தலக்குண்டு ஒன்றிய முழுவதும் காவிரி நீர் வினியோகம் செய்யம் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த மாதத்திற்குள் அனைத்து ஊராட்சிகளுக்கும் வெள்ளோட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கரூர் மாவட்டம், மாயனுாரில், திண்டுக்கல் மாவட்டத்திற்காக பெரிய கிணறுகள் அமைக்கப்பட்டு ராட்சத குழாய்கள் மூலம் காவிரி நீர் எடுக்கப்படுகிறது. ரெட்டியார்சத்திரத்திலிருந்து வத்தலக்குண்டு அருகேயுள்ள ரெட்டியபட்டியில் 1.5 லட்சம் கொள்ளளவு கொண்ட கீழ் நிலைத் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இங்கிருந்து வத்தலக்குண்டு ஒன்றியத்தில் உள்ள 17 ஊராட்சிகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்ல கோம்பைப்பட்டி, கணவாய்பட்டி, எழுவணம்பட்டி ஊராட்சிகளில் 3 பிரிவுகளாக பணியாளர்கள் குழாய் அமைக்கும் பணியில் முழுவீச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரியில் தற்போது நீர் வரத்து இருப்பதாலும், அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதாலும் அதற்குள் பணிகளை முடித்து வெள்ளோட்டம் நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். சோதனை ஓட்டமாக ரெட்டியபட்டி, சின்னுபட்டி மேல்நிலைத் தொட்டிகளுக்கு தண்ணீர் நிரப்பி சோதனை நடத்தப்பட்டு, தற்போது கீழக்கோயில்பட்டி, மேலக்கோயில்பட்டி, வெங்கடாஸ்திரிகோட்டை, காலனி பகுதிக்கு குழாய் பதிக்கப்பட்டு வருகிறது.
திருடு போகும் பொருட்கள்: ஊராட்சிகளுக்கு மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றப்படும் தண்ணீர் மீண்டும் கீழ்நிலைத் தொட்டிகளுக்கு வராமல் தடுக்க என்ஆர்வி(நான் ரிட்டன் வால்வ்) பொருத்தப்பட்டு உள்ளது. பித்தளையால் ஆன இந்த வால்வுகளை சிலர் திருடிச் செல்கின்றனர். இதனால் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. கிராமத்தினர் பொது நலன் கருதி வால்வுகளை திருடுபவர்களை எச்சரித்தால் சிரமங்கள் குறையும் என குடிநீர் திட்ட பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலக்கதை