அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்குங்கள் தமிழக அமைச்சரவையில் தீர்மானம்

PARIS TAMIL  PARIS TAMIL
அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்குங்கள் தமிழக அமைச்சரவையில் தீர்மானம்

தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்து முடிந்த நிலையில், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திராவிடர் இயக்கத்தின் முன்னோடி தலைவரும், சமுதாய முன்னேற்றத்துக்காக பாடுபட்டவரும், ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்ற வகையில் வாழ்நாள் முழுவதும் ஏழை மக்களுக்காக உழைத்தவருமான முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது அளிப்பதற்கு மத்திய அரசுக்கு பரிந்துரைக்க இன்றைக்கு அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

உலக முழுவதும் வாழ்கிற 10 கோடி தமிழ் மக்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிற சமூக நீதி காத்த வீராங்கனை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க அமைச்சரவை ஒப்புதலுடன் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பரில் பரிந்துரை செய்தது. அந்த கோரிக்கையை மீண்டும் மத்திய அரசுக்கு வலியுறுத்தவும் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டு மக்களையும், தமிழ் மொழியையும் தன் உயிரினும் மேலாக நேசித்தவரும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக எண்ணில்லா திட்டங்களையும் தந்தவருமான, சரித்திரம் புகழும் திட்டமான சத்துணவு திட்டம் தந்தவருமான மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை மத்திய ரெயில்வே நிலையத்துக்கு (சென்டிரல்) அவருடைய பெயரை சூட்ட மத்திய அரசுக்கு பரிந்துரைக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக, உலக எம்.ஜி.ஆர். பேரவை தலைவர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக எம்.ஜி.ஆர். பேரவை மாநாட்டில், நாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, தமிழக அமைச்சரவை கூட்டத்தில், சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைச்சர்களுக்கும் எங்களது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கோடிக்கணக்கான எம்.ஜி.ஆர். தொண்டர்களின் 30 ஆண்டுகால கோரிக்கை இப்போது நிறைவேறியுள்ளது. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா முடிந்த இந்த ஆண்டில், அவரது புகழுக்கு மகுடம் சேர்க்கும் வகையில் மேலும் பல அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதுபோல, அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஏனைய 3 தீர்மானங்களையும் வரவேற்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மூலக்கதை