யுஎஸ் ஓபன் டென்னிஸ் நவோமி ஒசாகா சாம்பியன்: செரீனாவை வீழ்த்தி சாதனை

தினகரன்  தினகரன்
யுஎஸ் ஓபன் டென்னிஸ் நவோமி ஒசாகா சாம்பியன்: செரீனாவை வீழ்த்தி சாதனை

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்சை வீழ்த்திய நவோமி ஒசாகா, கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் ஜப்பானியர் என்ற சாதனையை வசப்படுத்தினார். டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த போட்டியில், செரீனா (36 வயது, 17வது ரேங்க்) தனது 24வது ஒற்றையர் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று மார்கரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்யும் முனைப்புடன் களமிறங்கினார். அதே சமயம், முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்த நவோமி ஒசாகா (20 வயது, 20வது ரேங்க்), தனது மானசீக குருவாகக் கருதும் செரீனாவை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொண்டார்.தொடக்கத்தில் இருந்தே துடிப்புடன் விளையாடி செரீனாவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த ஒசாகா 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். வழக்கத்துக்கு மாறாக சற்று பதற்றத்துடன் விளையாடிய செரீனா 2வது செட்டில் கடுமையாகப் போராடியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. நடுவருடன் வாக்குவாதம்: ஒசாகாவின் அதிரடிக்கு ஈடுகொடுக்க முடியாமல் செரீனா திணறுவதை பார்த்த அவரது பயிற்சியாளர் பேட்ரிக் சில வியூகங்களை மாற்றி விளையாடுமாறு சைகை காட்டினார். இது கிராண்ட் ஸ்லாம் போட்டி விதிகளுக்குப் புறம்பானது என சுட்டிக்காட்டிய நடுவர் செரீனாவை எச்சரித்தார். பயிற்சியாளர் சைகை செய்ததை தான் பார்க்கவில்லை என்றும், ஏமாற்றி வெற்றி பெற வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் கூறிய செரீனா நடுவர் கார்லோஸ் ராமோசுடன் வாக்குவாதம் செய்தார். மேலும், தனது டென்னிஸ் மட்டையை ஆத்திரத்துடன் தரையில் ஓங்கி அடித்தார்.அவரது நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்த நடுவர் ராமோஸ் முதலில் ஒரு புள்ளியை அபராதமாக ஒசாகாவுக்கு வழங்கினார். செரீனா தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அந்த கேமில் ஒசாகா வென்றதாக அறிவித்தார். இந்த சர்ச்சைகளின்போது பொறுமையுடன் அமைதி காத்த ஒசாகா கவனமாக விளையாடி 6-2, 6-4 என்ற நேர் செட்களில் செரீனாவை வீழ்த்தி முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் ஜப்பானியர் என்ற பெருமை ஒசாகாவுக்கு கிடைத்துள்ளது. எதிர்பாராத தோல்வியால் கண்ணீர் விட்டு அழுத செரீனா பின்னர் தன்னை தேற்றிக் கொண்டு இளம் சாம்பியனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மூலக்கதை