ஓவல் டெஸ்ட் முதல் இன்னிங்சில் இந்தியா 292 ரன் ஆல் அவுட்: விஹாரி, ஜடேஜா அரை சதம்

தினகரன்  தினகரன்
ஓவல் டெஸ்ட் முதல் இன்னிங்சில் இந்தியா 292 ரன் ஆல் அவுட்: விஹாரி, ஜடேஜா அரை சதம்

லண்டன்: இங்கிலாந்து அணியுடனான 5வது மற்றும் கடைசி டெஸ்டில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 292 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அறிமுக வீரர் ஹனுமா விஹாரி, ஜடேஜா இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தனர். கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 332 ரன் குவித்து ஆல் அவுட்டானது. குக் 71, மொயீன் அலி 50, பட்லர் 89, பிராடு 38 ரன் விளாசினர். இந்திய பந்துவீச்சில் ஜடேஜா 4 விக்கெட், பூம்ரா, இஷாந்த் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்திருந்தது. ராகுல், புஜாரா தலா 37, கேப்டன் கோஹ்லி 49 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். தவான் 3, ரகானே 0, ரிஷப் பன்ட் 5 ரன்னில் வெளியேறினர். அறிமுக வீரர் ஹனுமா விஹாரி 25 ரன், ஜடேஜா 8 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். பொறுப்புடன் நிதானமாக விளையாடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 77 ரன் சேர்த்தது. விஹாரி 56 ரன் (124 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி மொயீன் அலி சுழலில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ வசம் பிடிபட்டார். ஒரு முனையில் ஜடேஜா உறுதியுடன் விளையாட... இஷாந்த் 4, ஷமி 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். 14 பந்துகளை சந்தித்த பூம்ரா ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட்டானார். இந்தியா 95 ஓவரில் 292 ரன் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜடேஜா 86 ரன் (156 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.இங்கிலாந்து பந்துவீச்சில் ஆண்டர்சன், ஸ்டோக்ஸ், மொயீன் அலி தலா 2, பிராடு, கரன், ரஷித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 40 ரன் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 19 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 34 ரன் எடுத்திருந்தது. ஜென்னிங்ஸ் 10 ரன் எடுத்து ஷமி வேகத்தில் கிளீன் போல்டானார். குக் 13 ரன், மொயீன் அலி 5 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணியை குறைந்த ஸ்கோரில் கட்டுப்படுத்தாவிட்டால், இந்திய அணி கடும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை