வைகையில் கழிவுநீர் கலப்பதை தடுப்பது எப்போது! முதல்வர் அறிவிப்பு செயல்படுத்தப்படுமா

தினமலர்  தினமலர்
வைகையில் கழிவுநீர் கலப்பதை தடுப்பது எப்போது! முதல்வர் அறிவிப்பு செயல்படுத்தப்படுமா

மதுரை:மதுரையில் வைகையாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க முதல்வர் பழனிசாமி அறிவித்தபடி சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி 258 கி.மீ., துாரம் பயணிக்கும் வைகை நதி மூலம் தேனி, மதுரை உட்பட ஐந்து மாவட்டங்கள் பயன்பெறுகின்றன. வைகையில் ஆங்காங்கு நடக்கும் மணல் கொள்ளையால் கரையோர நகரங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது.
இந்நிலையில் வைகை மதுரை நகரில் அதிகளவில் மாசுபடுகிறது. நகரிலிருந்து வெளியேறும் கழிவுநீர் வைகையாற்றில் விடப்படுகிறது. இதனால் தண்ணீரே மாசுபடுகிறது. மதுரையில் ஜூலை 15 காளவாசல் மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் பழனிசாமி, வைகை மாசுபடுவை தடுக்க நகரிலிருந்து சேரும் கழிவுநீர் சுத்திகரித்து விடப்படும் என அறிவித்தார்.
ஆனால் இதுகுறித்து எந்த பணிகளையும் மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் துவக்கவில்லை. சமீபத்திய மழையால் வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதும் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலையில் கழிவுநீர் கலந்து காணப்பட்டது. கழிவுநீர் கலக்காதவாறு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும்.
துவரிமான் உட்பட வைகையில் பல இடங்களில் மண்டியுள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். வைகையின் இரு கரைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பலப்படுத்தி பூங்காவுடன் கூடிய ரோடு அமைக்க மாவட்ட, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மூலக்கதை