சிறிலங்காவில் தமிழ் மொழியை தடுக்க முயற்சிக்கும் சீனா? உதவும் நியூசிலாந்து

PARIS TAMIL  PARIS TAMIL
சிறிலங்காவில் தமிழ் மொழியை தடுக்க முயற்சிக்கும் சீனா? உதவும் நியூசிலாந்து

நியூசிலாந்தின் பிரபல பால் பொருள் உற்பத்தி நிறுவனம் ஒன்றினால், சிறிலங்காவில் சந்தைப்படுத்தப்படும், பட்டர் பொதியில், தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது.
 
அதற்கு பதிலாக, சீன மொழியில் அச்சிடப்பட்டுள்ள சம்பவம் கடும் எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளது.
 
முன்னதாக குறிப்பிட்ட நிறுவனத்தின் பால் பொருள் பொதிகளில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அச்சிடப்பட்டிருக்கும்.
 
எனினும், தற்போது குறித்த நிறுவனத்தினால் சந்தைப்படுத்தப்பட்டுள்ள பட்டர் பொதிகளில் தமிழ் மொழி நீக்கப்பட்டு, சிங்களம், ஆங்கிலம் ஆகியவற்றுடன் சீன மொழி அச்சிடப்பட்டுள்ளது.
 
இது சிறிலங்காவின் தேசிய மொழி கொள்கையை மீறுகின்ற செயல் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
 
சீன மொழி அச்சிடப்பட்டுள்ளது பிரச்சினையல்ல, ஆனால், உள்ளூர் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியது முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
அத்துடன், தமிழ் மொழியை சேர்க்கும் வரை குறிப்பிட்ட நிறுவனத்தின் உற்பத்தியை தமிழ் நுகர்வோர், வாங்காமல் புறக்கணிக்க வேண்டும் என்றும், மனோ கணேசன் முகநூல் பதிவு ஒன்றில் கோரியுள்ளார்.
 
எனினும், குறிப்பிட்ட நியூசிலாந்து நிறுவனம் தமது செயற்பாட்டை நியாயப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளது.
 
தமது பட்டர் பொதி, நியூசிலாந்திலேயே தயாரிக்கப்பட்டு, பொதியிடப்பட்டு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், அதே பொதியே சிறிலங்காவுக்கு அனுப்பப்படுவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
 
பொதுவாக இந்த நாடுகளில் பேசப்படும் மொழி தமது பொதிகளில் அச்சிடப்பட்டிருக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை