அரசு மருத்துவமனையில் சிறப்பு மையம் ஏற்பாடு:மார்பக புற்றுநோய் பரிசோதனைக்கு வாய்ப்பு

தினமலர்  தினமலர்
அரசு மருத்துவமனையில் சிறப்பு மையம் ஏற்பாடு:மார்பக புற்றுநோய் பரிசோதனைக்கு வாய்ப்பு

திண்டுக்கல்:திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மார்பக புற்றுநோயை கண்டறியும் சிறப்பு பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், உணவுப் பழக்கம், உடல் பருமன் அதிகரிப்பு, திருமணத்துக்கு பின் குழந்தை பெறாத பெண்கள், பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காதவர், மிகக்குறைந்த வயதில் பருவம் எய்தியவர்கள், 35 வயதுக்கு பின் கர்ப்பம் தரித்து முதல் குழந்தை பெற்றெடுப்பவர்ளுக்கு மார்பக புற்றுநோய் வர அதிக வாய்ப்புள்ளது. தமிழகத்தில் 15 முதல் 20 சதவீதம் பெண்கள் ஆண்டுதோறும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
'மேமோகிராபி' கருவி
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மார்பக புற்றுநோயை கண்டறிய சிறப்புமையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து ரூ.20 லட்சத்தில் 'மேமோகிராபி' கருவி வாங்கப்பட்டுள்ளது. சி.டி.,ஸ்கேன் மையத்தில் இதற்கென தனிப்பிரிவு தயாராகி வருகிறது.பெண்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்யப்படும். குறைந்த நேரத்தில் வலி இல்லாமல் மின்னணு எக்ஸ்ரே மூலம் படம் பிடிக்கலாம். அதனை மறு ஆய்வும் செய்ய முடியும். ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியும் தெரியாது. நோய் பரவிய நிலையில் தொடுதலின் மூலம் வித்தியாசத்தை உணர முடியும்.
நோய் தாக்கம் அதிகரித்தால் மார்பகத்தில் வீக்கம், மூச்சு விடுதலில் சிரமம், முதுகுவலி ஏற்படும். ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால் ஹீமோதெரபி, கதிர்வீச்சு மூலம் மார்பக புற்றுநோயை குணப்படுத்த முடியும். முற்றிய நிலையில் மார்பகத்தை அகற்ற வேண்டிய நிலை ஏற்படும். இதனால் ஆண்டுதோறும் பெண்கள் முழு உடல் பரிசோதனை செய்வது அவசியம், என டாக்டர்கள் தெரிவித்தனர்.

மூலக்கதை