குழந்தையின் சிகிச்சைக்காக, கோவையில் ஒரே நேரத்தில் 12 சிக்னல்கள் நிறுத்தம் - சினிமாவை விஞ்சிய சம்பவம் !!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
குழந்தையின் சிகிச்சைக்காக, கோவையில் ஒரே நேரத்தில் 12 சிக்னல்கள் நிறுத்தம்  சினிமாவை விஞ்சிய சம்பவம் !!

ஒரு குழந்தையின் அவசர சிகிச்சைக்காக, கோவையின் முக்கிய சிக்னல்கள் உட்பட 12 போக்குவரத்து சிக்னலை ஒரே நேரத்தில் நிறுத்தி அவசர ஊர்தி மருத்துவமனை வரை விரைவாக செல்ல உதவிய கோவை காவல்துறையினருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஜேடர்பாளையத்தை சேர்ந்த விசைத்தறி உரிமையாளரான ஜெய்பிரகாஷ்க்கு தாமரை என்ற மனைவியும், ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளனர். நேற்று முன்தினம், மின்விசைத்தறி இயங்கி கொண்டிருந்தபோது, ஜெய்பிரகாஷின் பெண் குழந்தை தெரியாமல் கையை உள்ளே விட்டது. இதனால் அந்த பிஞ்சு குழந்தையின் நான்கு விரல்கள் துண்டானது. அவ்விரல்களை, ஐஸ் பெட்டியில் வைத்து, ஆம்புலன்சில் கோவை கங்கா மருத்துவமனைக்கு மேற்சிகிச்சைக்காக அழைத்து வர ஏற்பாடு செய்தனர்.

கோவை நகருக்குள், பகல் நேரத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி விட்டால், மருத்துவமனைக்கு செல்வது தாமதாகி விடும். ஆம்புலன்ஸ் டிரைவர் சங்க தலைவர் திபேஷ், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யாவை தொடர்புகொண்டு, இடையூறின்றி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டுகோள் விடுத்தார்.
அவிநாசி ரோடு சித்ரா முதல் சாய்பாபா காலனி, கங்கா மருத்துவமனை வரை, 12 சிக்னல்களை, நேற்று மாலை ஒரே நேரத்தில் சிவப்பு விளக்கு எரிய வைத்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அனைத்து சிக்னலில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, 'கிரீன் காரிடர்' முறையில், ஆம்புலன்ஸ் விரைந்து செல்ல போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய்தனர். ஆம்புலன்ஸ் விரைந்து சென்றதால், உடனடியாக குழந்தைக்கு ஆபரேஷன் செய்து, துண்டான கை விரல் இணைக்கப்பட்டது.

கோவை போக்குவரத்து காவல்துறையினரின் இந்த துரித செயலுக்கு பொது மக்கள் மத்தியிலும், சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

மூலக்கதை