இதுவும் அவசியம்தானே! மாவட்டத்தில் தேவை அறிவியல் மையம்:குரல் கொடுப்பார்களா மக்கள் பிரதிநிதிகள்

தினமலர்  தினமலர்

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் வகையில் அறிவியல் மையம் அமைக்கவேண்டுமென பள்ளி, கல்லுாரி மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் மீது மாவட்ட நிர்வாகம் தனிகவனம் செலுத்த வேண்டும்.
மத்திய அரசின் கலாசாரம் மற்றும் அறிவியல் துறை சார்பில் இந்தியாவில் 25 இடங்களில் மாவட்ட அறிவியல் மையம் அமைத்து மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் வகையில், செயல்வடிவ விளக்கங்களை துறை வல்லுனர்களை கொண்டு விளக்கமளிக்கிறது. இதனால் இன்றைய பாடதிட்டங்களுக்கான அறிவியல் செயல்பாடுகளை நேரடியாக பார்க்கும் மாணவர்களின் மனதில் அந்த பாடவிளக்கங்கள் எளிதில் புரிகிறது.தமிழகத்தில் இதற்கான ஒரே மையம் திருநெல்வேலியில் மட்டும் தான் இயங்கி வருகிறது. இந்த மையத்தின் மூலமாக ஒரு தனி அறிவியல் வாகனம் பள்ளி தோறும் சென்று விளக்கமளித்து வருகிறது. இதனால் அப்பள்ளி மாணவர்கள் தங்கள் பாடங்களில் எளிதில் புரிதல் திறனை பெறுகிறார்கள். இதைப்போல் அனைத்து நகர மாணவர்களும் போதிய அறிவியல் விளக்கங்கள் பெற, மாவட்டம் தோறும் அறிவியல் மையம் உருவாக்கவேண்டும்.இன்று கல்வியில் சிறந்து விளங்கும் முதன்மை மாவட்டமான விருதுநகரில் இதுபோன்ற அறிவியல் மையம் இல்லாததால் , பெரும்பாலான மாணவர்கள் அதன்பயனை அடையமுடியவில்லை. நமது மாவட்டத்திலும் அறிவியல் மையம் அமைய மாவட்டநிர்வாகம், மக்கள் பிரதிநிதிகளும் குரல் கொடுக்க வேண்டும். இதுவே மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாகும்.

மூலக்கதை