உதயமாகும்!கரம் கோர்த்தால் பசுமை நகரம்... 700 பூங்கா உருவாக்க அழைப்பு

தினமலர்  தினமலர்

கோவை:கோவை நகரில், 700க்கும் அதிகமான பூங்காக்களை மேம்படுத்த தனியார் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் முன் வர வேண்டுமென, மாநகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.மனைப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் பெற வேண்டுமெனில், ரோடுகளுக்கு உரிய இடத்தையும், அதன் மொத்தப்பரப்பில், 10 சதவீதம் இடத்தை, பொது ஒதுக்கீட்டு இடமாகவும், மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டுமென்பது, நகர ஊரமைப்பு விதிமுறை; அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகள் உருவாக்கும்போது, இவை எதுவும் கடைபிடிக்கப்படுவதில்லை. அங்கீகாரம் பெற்ற மனைப்பிரிவுகளிலும், மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்ட பல இடங்கள், ஆக்கிரமிப்பில் உள்ளன.கோவை நகரில், தன்னார்வ அமைப்புகள், குடியிருப்போர் நலச்சங்கங்களின் முயற்சியால், எக்கச்சக்கமான இடங்கள், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீட்கப்பட்ட இடங்களையும் சேர்த்து, கோவை மாநகராட்சியில், 1,367 பொது ஒதுக்கீட்டு இடங்கள் (ரிசர்வ் சைட்) இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில், 279 இடங்கள் மட்டுமே, இதுவரை மாநகராட்சி நிர்வாகத்தால், பூங்காக்களாக மேம்படுத்தப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள இடங்களில், 300க்கும் அதிகமான இடங்களில், வளாகம் கட்டப்பட்டுள்ளது அல்லது கம்பி வேலி அமைக்கப்பட்டு, 'இது மாநகராட்சிக்குச் சொந்தமான இடம்' என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இன்னும், 700க்கும் மேற்பட்ட இடங்கள், பராமரிப்பின்றியும், பாதுகாப்பின்றியும் உள்ளன. குறைந்தபட்சமாக, இந்த இடங்களில், கம்பி வேலி அமைத்து, அறிவிப்பு பலகை வைக்க வேண்டுமென, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.தற்போது, மாநகராட்சி பொது நிதியில் இதற்காக, 70 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது; ஆனால், பூங்காக்களாக மேம்படுத்த வேண்டுமெனில், பெருமளவு நிதி தேவைப்படுகிறது. இவ்விடங்களை பூங்காக்களாக உருவாக்க, அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பையும் கோர, கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு, நகராட்சி நிர்வாகங்களின் ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.இதன்படி, கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான, 700க்கும் மேற்பட்ட 'ரிசர்வ் சைட்'களை, பூங்காக்களாக மேம்படுத்த தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் முன்வர வேண்டுமென்று, மாநகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயன் கூறுகையில், ''தனியார் நிறுவனங்கள், 'சி.எஸ்.ஆர்.,' நிதியில் இவற்றை மேம்படுத்த முன்வரலாம்; கல்வி நிறுவனங்கள், தங்களது பகுதியில் உள்ள, 'ரிசர்வ் சைட்'களை, பூங்காக்களாக உருவாக்கலாம். ''இவ்வாறு, மேம்படுத் தும் நிறுவனங்களின் பெயர் களை முகப்புப் பகுதியில், (Maintained By....) பொருத்திக் கொள்ளலாம். எல்லோரும் ஒத்துழைத்தால், கோவை நகரை பசுமை நகரமாகவும், பூங்கா நகரமாகவும் மாற்றலாம்,'' என்றார்.

மூலக்கதை