பரிதாபம்...!கடன் சுமையால் விசைத்தறியாளர்கள் தறிகளை விற்பனை செய்யும் அவலம்

தினமலர்  தினமலர்
பரிதாபம்...!கடன் சுமையால் விசைத்தறியாளர்கள் தறிகளை விற்பனை செய்யும் அவலம்

பல்லடம்:'வங்கிக்கடன் அடைக்க, மானியக்கடன் வழங்க வேண்டும்' என,விசைத்தறி உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.திருப்பூர், கோவை மாவட்டம் சார்ந்து, 2 லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் இயங்குகின்றன. அவற்றில், 90 சதவீத விசைத்தறிகள், கூலி அடிப்படையில் செயல்படுகின்றன. விசைத்தறியாளர்கள் நான்காண்டாக ஒப்பந்தக் கூலி பெறாமல் உள்ளனர். இதனால், வாங்கிய வங்கிக்கடன் தவணையை கூட அவர்களால் திருப்பி செலுத்த முடியவில்லை; இதனால், கடன் சுமைக்கு ஆளாகியுள்ளனர். கடனை அடைக்க, தறிகளை, குறைந்த விலைக்கு விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.ஒருபுறம் கூலிப்பிரச்னை, மறுபுறம் கடன் சுமையில் சிக்கி தவிக்கும் விசைத்தறியாளர்கள், இரு மாவட்ட கலெக்டர்கள், முதன்மை வங்கி மேலாளர்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மட்டத்தில் பல கட்ட பேச்சு நடத்தியும் பயன் கிடைக்கவில்லை.விசைத்தறியாளர்கள் கூறியதாவது;மூன்றாண்டுக்கு ஒரு முறை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர் நல அலுவலர், மற்றும் கலெக்டர் முன்னிலையில், ஒப்பந்த கூலி பேச்சு நடத்தப்பட்டு, உடன்பாடு எட்டப்படும். கடந்த, 1992 முதல் நடந்து வந்த இப்பேச்சு, 2014ல் இருந்து கடைபிடிக்கப்படுவதில்லை.இதுகுறித்து, மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் பலனில்லை. விலைவாசி உயர்வு, மின் கட்டணம், தொழிலாளர் கூலி, வண்டி வாடகை உட்பட செலவு அதிகரித்துள்ளது. ஆனால், பழைய கூலியையே பெற்று வருகிறோம். எனவே, வங்கிக் கடனை அடைக்க, ஒரு முறை மானியக் கடனாக, 50 கோடி ரூபாய் வழங்க வேண்டும். ஜவுளி சந்தை, பொது பயன்பாட்டு மையம் போன்ற கோரிக்கைகளை அரசு பரிசீலிப்பது போன்ற, விசைத்தறியாளர்கள் விவகாரத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூலக்கதை