இங்கிலாந்து 332 ரன் குவிப்பு : இந்திய அணி திணறல்...6 விக்கெட்டுக்கு 174 ரன்

தினகரன்  தினகரன்

லண்டன்: இந்திய அணியுடனான 5வது மற்றும் கடைசி டெஸ்டில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 332 ரன் குவித்து ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 174 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்திருந்தது. தொடக்க வீரர் குக் 71, ஜென்னிங்ஸ் 23, மொயீன் அலி 50 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ரூட், பேர்ஸ்டோ, கரன் ஆனியோர் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். ஜோஸ் பட்லர் 11, அடில் ரஷித் 4 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.அடில் ரஷித் 15 ரன் எடுத்து பூம்ரா வேகத்தில் எல்பிடபுள்யு முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து பட்லருடன் ஸ்டூவர்ட் பிராடு ஜோடி சேர்ந்தார். இருவரும் 9வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 98 ரன் சேர்த்தனர். பட்லர் அரை சதம் அடித்து அசத்தினார். பிராடு 38 ரன் (59 பந்து, 3 பவுண்டரி), பட்லர் 89 ரன் (133 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஜடேஜா சுழலில் பெவிலியன் திரும்ப, இங்கிலாந்து 122 ஓவரில் 332 ரன் குவித்து ஆல் அவுட்டானது. இந்திய பந்துவீச்சில் ஜடேஜா 4 விக்கெட் கைப்பற்்றினார். இதைத் தொடர்ந்து இந்திய அணியில் ஷிகர் தவான் 3 ரன் மட்டுமே எடுத்து பிராடு வேகத்தில் வெளியேற, கே.எல்.ராகுல் 37,  புஜாரா 37, கோஹ்லி 49  ரன்னில் அவுட்டாயினர். ரகானே  (0) வந்த வேகத்தில் திரும்பினார். 2வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 174  ரன் எடுத்திருந்தது. விகாரி 25, ஜடேஜா 8 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

மூலக்கதை