யுஎஸ் ஓபன் டென்னிஸ் பைனலில் ஜோகோவிச் - டெல்போட்ரோ மோதல்

தினகரன்  தினகரன்
யுஎஸ் ஓபன் டென்னிஸ் பைனலில் ஜோகோவிச்  டெல்போட்ரோ மோதல்

நியூயார்க்: அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சுடன் அர்ஜென்டினா வீரர் ஜுவன் மார்டின் டெல்போட்ரோ மோதுகிறார்.நடப்பு சாம்பியனும் நம்பர் 1 வீரருமான ரபேல் நடால் (ஸ்பெயின்) தனது அரை இறுதியில் டெல்போட்ரோவை (29 வயது) எதிர்கொண்டார். கடும் போராட்டமாக அமைந்த முதல் செட்டில் டெல்போட்ரோ 7-6 (7-3) என டை பிரேக்கரில் வென்று முன்னிலை பெற்றார். வலது முழங்கால் மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்ட நடால் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறினார். இரண்டாவது செட்டையும் டெல்போட்ரோ 6-2 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக நடால் அறிவித்தார்.இதையடுத்து, 9 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கிராண்ட் ஸ்லாம் தொடரின் இறுதிப் போட்டிக்கு டெல்போட்ரோ முன்னேறினார். இவர் கடந்த 2009ம் ஆண்டு யுஎஸ் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றொரு அரை இறுதியில் நோவாக் ஜோகோவிச், ஜப்பான் வீரர் கெய் நிஷிகோரியை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி நிஷிகோரியின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்று பைனலுக்கு தகுதி பெற்றார். இன்று நடைபெறும் பரபரப்பான இறுதிப் போட்டியில் ஜோகோவிச் - டெல்போட்ரோ மோதுகின்றனர். பிரையன் - சாக் சாம்பியன்: ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் அமெரிக்காவின் பாப் பிரையன் - ஜாக் சாக் ஜோடி 6-3, 6-1 என்ற நேர் செட்களில் லூகாஸ் குபாட் (போலந்து) - மார்செலோ மெலோ (பிரேசில்) ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

மூலக்கதை