ரயில்வே தண்டவாளத்தில் யானைகள் பலியை தடுக்க‘பிளான் பி’ திட்டம் அமல்: மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரயில்வே தண்டவாளத்தில் யானைகள் பலியை தடுக்க‘பிளான் பி’ திட்டம் அமல்: மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்

புதுடெல்லி: ரயில் தண்டவாளங்களை யானைகள் கடக்கும் போது ரயிலில் அடிப்பட்டு உயிரிழப்பதை தடுக்க, ‘பிளான் பி’ என்ற நவீன முறை ஒன்றை மத்திய ரயில்வே அமைச்சரகம் அறிமுகம் செய்ய உள்ளது.
நாடு முழுவதும் வனம் மற்றும் மலைப்பகுதிகளுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள ரயில்வே தண்டவாளங்களை, அப்பகுதிகளில் வசிக்கும் யானை கூட்டங்கள் கடந்து செல்ல முயலும் போது, ரயில்களில் அடிப்பட்டு இறப்பது தொடர்கதையாகி வருகிறது. மேலும், வனப்பகுதிகள் நிலப்பகுதிகளாக மாற்றப்பட்டு வருவதால், உணவு மற்றும் தண்ணீருக்காக யானைகள் இடம்பெயரும் போது ரயிலில் அடிப்பட்டு இறப்பதை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது விலங்கின ஆர்வலர்கள் மற்றுமின்றி பல்வேறு தரப்பினரையும் கவலையடைய செய்துள்ளது.

இந்நிலையில், ரயில் தண்டவாளத்தை யானைகள் கடக்கும் போது, அவை அடிப்பட்டு இறப்பதை தடுக்கும் விதமாக ‘பிளான் பி’ (Bee - தேனீ) என்ற திட்டத்தை அமல்படுத்த ரயில்வே துறை முடிவெடுத்துள்ளது.

பொதுவாக யானைகளுக்கு தேனீக்கள் என்றால் பயம் என்றும், அதனுடைய சத்தத்தை கேட்டாலே அவை அலறியடித்து ஓடி விடும் என்று விலங்கியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதனை தொழில்நுட்ப ரீதியாக பயன்படுத்த திட்டமிட்ட ஆராய்ச்சியாளர்கள், வனப்பகுதிகளை ரயில்கள் கடந்து செல்லும் போது, தேனீக்களின் சத்தத்தை எழுப்பும் ஒலிப்பெருக்கிகளை தண்டவாளத்தின் அருகே இணைக்கும் புதிய முறையை அறிமுக செய்ய உள்ளனர்.



இதன்படி, வனப்பகுதிக்கு அருகே ரயில்கள் செல்லும் போது, அங்கே ரயில் தண்டவாளங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிப்பெருக்கிகள் தேனீக்கள் போன்ற சத்தத்தை எழுப்பும் போது, அவை தண்டவாளத்திற்கு அருகே வராமல் பிறபகுதிக்கு ஓடிவிட வாய்ப்புள்ளது. இதுதொடர்பான வீடியோவை, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, மேற்கண்ட புதிய திட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரயில்வே துறையின் இத்திட்டம், விலங்கியல் ஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


.

மூலக்கதை