தேர்தல் வாக்குறுதிகள் என்னாச்சு? மோடி ஆட்சியில் இளைஞர்கள் வேதனை: புத்தக வெளியீட்டு விழாவில் மன்மோகன் சிங் பேச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தேர்தல் வாக்குறுதிகள் என்னாச்சு? மோடி ஆட்சியில் இளைஞர்கள் வேதனை: புத்தக வெளியீட்டு விழாவில் மன்மோகன் சிங் பேச்சு

புதுடெல்லி: பிரதமர் மோடி, தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காததால், இளைஞர்கள் மிகவும்  வேதனை அடைந்துள்ளதாக, புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான கபில்சிபில் எழுதிய புத்தக வெளியீட்டு விழா, டெல்லியில் நடைபெற்றது.

அப்போது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி சட்டத்தை அவசரமாக நடைமுறைப்படுத்தியதால், தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எளிமையான முறையில் தொழில் செய்யும் திட்டங்களில் இருந்து இன்னும் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் நன்மைகளை பெறவில்லை.

விவசாயம், பொருளாதாரம் மற்றும் அண்டை நாடுகளுடன் நட்புறவில் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு வளர்ச்சி சதவீதம் மிகவும் குறைந்துவிட்டது. பிரதமர் மோடி, தனது தேர்தல் வாக்குறுதியில், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றார்.

ஆனால், மோடி அளித்த வாக்குறுதி என்ன ஆனது? மத்திய அரசின் இந்த வாக்குறுதியை எதிர்பார்த்து இளைஞர்கள் மிகவும் வேதனையுடன் உள்ளனர். மேலும், நாட்டில் பெண்கள், தலித்கள் மற்றும் சிறுபான்மையினர்கள் ஒருவித பாதுகாப்பின்மையோடு வாழ்ந்து வருகின்றனர்.

வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆக்கப்பூர்வமானதாக இல்லை. கடந்த 2014ம் தேர்தலின்போது பல்வேறு வாக்குறுதிகளை கூறி, தேர்தலில் வெற்ற பிரதமர் மோடி அரசு, அதனை நிறைவேற்ற தவறிவிட்டது.

ஆனால், ‘அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன’ என்று பிரதமர் மோடி கூறிவருவதை மக்கள் நம்பவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

.

மூலக்கதை