மாலையில் நடக்கும் செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு: டெல்லியில் மாநில நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
மாலையில் நடக்கும் செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு: டெல்லியில் மாநில நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை

புதுடெல்லி: பாஜ கட்சியின் தேசிய செயற்குழு கூட்டமானது இன்றும், நாளையும் டெல்லியில் உள்ள அம்பேத்கர் அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் முதல் நாளான இன்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவும், பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்கின்றனர்.

கட்சியின் முக்கிய தலைவர் கலந்து கொள்ளும் இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் இன்று மாலையில் மாநில தலைவர்களின் கூட்டத்தை அமித்ஷா கூட்டியுள்ளார்.

அதில் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கின்றனர். பாஜ கட்சி ஆட்சிக்கு வந்து அடுத்த ஆண்டோடு 5 வருடம் நிறைவடைகிறது.

இதில் அந்த கட்சி ஆட்சியில் இருந்த காலக்கட்டத்தில் நாட்டில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை பதிலாக மக்கள் தான் அலைக்கழிக்கப்பட்டுள்ளார்கள் என பாஜ ஆதரவு இல்லாத அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த பரப்பரப்பான சூழலில் பாஜ கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் புதுடில்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு கூடுகிறது.

இதில் முதல் கட்டமாக இன்றும் அதனைத் தொடர்ந்து நாளையும் இந்த கூட்டமானது நடைபெறுகிறது. இந்த செயற்குழு கூட்டம் கடந்த மாதமே நடைபெற இருந்தது.

ஆனால் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவையொட்டி தேதி குறிப்பிடாமல் அப்போது ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தான் கூட்டம் கூடுகிறது.

இதில் முதல் நாளான இன்றைய கூட்டம் பாஜ கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் துவங்க உள்ளது. முதலாவதாக கூட்டத்தின் போது மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.

இதையடுத்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் குறிப்பாக லோக்சபா தேர்தலின் போது தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் பாஜ யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து மீண்டும் நாளை காலை இரண்டாவது நாளாக கூடும் இந்த செயற்குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.

இதில் பாஜவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் மற்றும் அனைத்து மாநிலத்தின் முக்கிய கட்சி நிர்வாகிகள் உட்பட மொத்தம் 350க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் பிரதமர் மோடி பங்கேற்கும் இரண்டாவது நாள் கூட்டத்தில் பணமதிப்பு இழப்பு பிரச்னை, காங்கிரஸ் கட்சியின் முக்கிய குற்றமாக தெரிவிக்கப்படும் ரபேல் போர் விமான பிரச்னை, எஸ்சி, எஸ்டி சட்ட திருத்த மசோதா ஆகிய முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

அதேப்போல் பாஜ ஆட்சி அதிகாரம் இல்லாத மாநிலங்களில் கட்சியை எப்படி வலுப்படுத்துவது, நாடாளுமன்ற  மற்றும் மாநில தேர்தல் ஆகியவற்றை ஒன்றாக நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளிடம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அதற்கு எதிரான பதில்களே வந்துள்ளதால் அதனை எப்படி சமாளிப்பது,

தேர்தல் நேரத்தில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது தொடர்பாக மக்களிடம் எப்படி விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பெட்ரோல்,டீசல் விலை உயர்வு பிரச்னை உட்பட பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிகிறது. இதைத்தவிர வரும் 2019ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகம், தெலங்கானா மற்றும் ஒடிசாவில் கூட்டணி அமைப்பது தொடர்பான விவாதம் தான் இந்த கூட்டத்தில் முக்கியமாக இருக்கும் என அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

இதில் இந்த கூட்டத்தின் முன்னோடியாக இன்று காலை 10 மணிக்கு பாஜ கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் தொடங்கியது. இதில் பாஜ மாநில தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் தமிழகத்தின் சார்பாக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்டுள்ளார்.

அதேபோல ஒவ்வொரு மாநிலத்தின் சார்பிலும் மாநில தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

.

மூலக்கதை