அள்ளித் தந்த வானம்! நிரம்பிய நிலையில் தொடரும் அமராவதி அணை:இரு மாவட்ட விவசாயத்திற்கு வரமான உபரி நீர்

தினமலர்  தினமலர்

உடுமலை:உடுமலை அமராவதி அணைக்கு, நிலையான நீர்வரத்து காரணமாக, ஒரு மாதமாக நிரம்பிய நிலையில் உள்ளதால், உபரிநீர் வெளியேற்றப்பட்டு, பாசனத்துக்கு பயன்பட்டு வருகிறது.உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை மூலம், திருப்பூர், கரூர் மாவட்டங்களுக்குட்பட்ட, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்தாண்டு பெய்த தென்மேற்கு பருவமழையால், கடந்த, ஜூலை, 16ல் அணை நிரம்பி, உபரி நீர் திறக்கப்பட்டது. ஆக., 3 வரை, தொடர்ந்து, 19 நாட்கள் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
இரண்டாவது முறையாக, ஆக.,8ல் அணை நிரம்பியது. அதிலும், மூணாறு, மறையூர், தலையார் உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக, ஆக., 15 முதல் ஒரு வாரத்திற்கு அதிகளவு நீர் வெளியேற்றப்பட்டு, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.மழை குறைந்தாலும், ஒரு மாதமாக அணைக்கு நீர் வரத்து குறையவில்லை. இதனால், கடந்த, ஒரு மாதமாக அமராவதி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த, 29ம் தேதி வரை பிரதான கால்வாயில் உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், வரத்து குறைந்ததால், தற்போது ஆற்றில் மட்டும் நீர் திறக்கப்பட்டுள்ளது.நேற்று காலை, நிலவரப்படி, அமராவதி அணையில், மொத்தமுள்ள, 90 அடியில், 88.09 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 360 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து, ஆற்றில், வினாடிக்கு, 360 கன அடி நீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டது.
மூன்றாண்டு இடைவெளிஅமராவதி அணை மூன்று ஆண்டுக்கு பிறகு இந்தாண்டு நிரம்பியுள்ளது. கடந்த, 2015ல், டிச.,3 முதல் 31 வரை, 29 நாட்கள் அணை நிரம்பிய நிலையிலேயே இருந்தது. உபரி நீர் வெளியேற்றப்பட்டது. மூன்று ஆண்டுக்கு பிறகு, இந்தாண்டு, ஒரு மாதம் அணை நிரம்பிய நிலையிலேயே, தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்தாண்டில், ஜூலை மாதம், 19 நாட்களும், தற்போது, கடந்த, 31 நாட்கள் என, 50 நாட்கள் அணை நிரம்பி, ததும்பி வருகிறது.

செழிக்கும் பாசனம்!
அமராவதி அணை மூலம், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு அணை நீர் இருப்பு கருதி நீர் திறக்கப்படும். இந்தாண்டு, எட்டு ராஜவாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறக்க அரசு உத்தரவிட்டது. ஆனால், புதிய ஆயக்கட்டு பாசனம் மற்றும் கரூர் வரை உள்ள நிலங்களுக்கு, உபரி நீர் சென்று வருகிறது.ஜூன் மாதம், 65 அடி நீர்மட்டம் உயர்ந்ததால், 10 நாட்கள் ஆற்றிலும், 15 நாட்கள் பிரதான கால்வாயிலும் நீர் திறக்கப்பட்டது. அடுத்து இரு மாதங்கள் உபரி நீர் வழங்கப்பட்டுள்ளது. அணை நிரம்பி உபரி நீர் கிடைத்ததால், இரு மாவட்ட விவசாயிகளும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரிக்கை விடுக்கவில்லை, என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை