ஈராக்கில் பதற்றம் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை; 3 பேர் பலி

PARIS TAMIL  PARIS TAMIL
ஈராக்கில் பதற்றம் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை; 3 பேர் பலி

ஈராக் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பஸ்ரா மாகாணத்தின் தலைநகர் பஸ்ராவில் உள்கட்டமைப்புகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும், அரசு சேவைகள் கிடைக்கப்பெறாமல் புறக்கணிக்கப்படுவதாகவும் கூறி அந்த நகரை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த திங்கட்கிழமை வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே வன்முறை வெடித்தது. இந்த மோதலில் பலர் உயிர் இழந்தனர்.

இதன் காரணமாக அங்கு போராட்டம் தீவிரமடைந்தது. இதையடுத்து பஸ்ரா நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும் பஸ்ரா நகர மக்கள் அதனை பொருட்படுத்தாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பஸ்ரா நகரில் அரசு அலுவலகங்கள், அரசியல் கட்சி அலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். அரசு செய்தி சேனல் நிறுவனத்துக்கும் தீவைக்கப்பட்டது.

அதுமட்டும் இன்றி நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்தை துண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்புபடை வீரர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு, தடியடியும் நடத்தினர்.

இந்த மோதலில் போராட்டக்காரர்கள் 3 பேர் உயிர் இழந்தனர். இதன் மூலம் அங்கு கடந்த திங்கட்கிழமை முதல் நடந்து வரும் வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம் போராட்டக்காரர்கள் கற்கள் மற்றும் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் 10–க்கும் மேற்பட்ட பாதுகாப்புபடை வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

மூலக்கதை