'சோக்சியை கைது செய்வது எளிதான காரியம் அல்ல'

தினமலர்  தினமலர்
சோக்சியை கைது செய்வது எளிதான காரியம் அல்ல

புதுடில்லி : 'வைர வியாபாரி, மெஹுல் சோக்சியை கைது செய்வது, எளிதான காரியமல்ல' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மஹாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த வைர நகை வியாபாரிகள் நிரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்சி. இவர்கள், பஞ்சாப் நேஷனல் வங்கியின், மும்பை கிளையில், 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல், வெளிநாடு தப்பிச் சென்றனர்.

இருவரையும், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். அமலாக்கத் துறை அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று, 'இன்டர்போல்' எனப்படும், சர்வதேச போலீசார், நிரவ் மோடிக்கு எதிராக, 'ரெட் கார்னர் நோட்டீஸ்' வழங்கினர்.

இந்நிலையில், அரசியல் சதி காரணமாக, தனக்கு எதிராக வழக்கு போடப்பட்டு உள்ளதாக, மெஹுல் சோக்சி கூறியதை அடுத்து, அவருக்கு எதிரான ரெட் கார்னர் நோட்டீசை, இன்டர்போல் நிறுத்தி வைத்தது. இந்நிலையில், ஐந்து உறுப்பினர்கள் அடங்கிய, இன்டர்போல் கமிட்டியின் கூட்டம், அடுத்த மாதம் கூடுகிறது. இதில், மெஹுல் சோக்சிக்கு, ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்குவது குறித்து, இந்த கமிட்டி முடிவு செய்யும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து, மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: மெஹுல் சோக்சி, கரீபிய தீவு நாடான ஆன்டிகுவா குடியுரிமை பெற்று, அந்த நாட்டில் பதுங்கி உள்ளார். சோக்சிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டாலும், அந்த நாட்டு சட்டத்திட்டங்களின் படி, அவரை கைது செய்ய முடியாது; அது, எளிதாக நடக்கக் கூடிய விஷயமல்ல. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை